செவ்வாய், 13 மார்ச், 2018

விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றது மகாராஷ்டிர அரசு! March 13, 2018

Image

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மேற்கொண்ட போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது. 

பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பை சட்டப்பேரவையை, 50 ஆயிரம் விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். 

மும்பையின் சர்கனா தொகுதி எம்.எல்.ஏ. ஜிவா பாண்டு காவித், அகில பாரதிய கிசான் சபா தலைவர் அஜித் நாவலே தலைமையில் நடந்த இந்த போராட்டத்திற்கு சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. 

மஹாராஷ்டிரா சட்டப்பேரவையில் விவசாயிகள் போராட்டம் எதிரொலித்த நிலையில், விவசாய சங்கத்தின் பிரதிநிதிகளுடன், முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில், போராட்டத்தைக் கைவிடுவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் சொந்த ஊர் திரும்பவதற்கு வசதியாக, சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.