ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை, 12 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் 3 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், கார்த்தி சிதம்பரத்தின் ஜாமின் மனுவை இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், நீதிமன்றக் காவலை நீட்டிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி சுனில் ரானா, கார்த்தி சிதம்பரத்தை 12 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனிடையே தனி அறை, வீட்டு உணவு ஆகிய வசதிகளை கார்த்தி சிதம்பரம் தரப்பு கோரியது, இதனை ஏற்க மறுத்த நீதிபதி சிறப்பு சலுகைகளை அளிக்கமுடியாது என கூறினார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார். மார்ச் 24ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
கார்த்தி சிதம்பரம் ஆஜர்ப்படுத்தட்ட போது அவரின் தந்தையும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரமும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.