உத்தரபிரதேசத்தில் கடந்த ஓராண்டில் நடத்தப்பட்ட 1,144 என்கவுண்டர்களில் 34 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் இந்தியாவிலேயே மிகவும் மோசமான மாநிலங்களுள் ஒன்றாக உத்தரப் பிரதேசம் திகழ்ந்து வந்தது. நாட்டிலே அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலமாகவும் அது விளங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்சியை கைப்பற்றிய பாஜகவின் யோகி ஆதித்யநாத் தனது தேர்தல் வாக்குறுதிகளில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீராக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற போது உத்தரப்பிரதேசத்தில் குற்ற எண்ணிக்கையை குறைக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் சரண் அடைய வேண்டும் அல்லது மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இவரது ஆட்சியில், சட்டம் - ஒழுங்கை பேணிக்காக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரவுடிகளை ஒடுக்க தேவைக்கு ஏற்ப என்கவுண்டர் நடத்தலாம் என்று, யோகி ஆதித்யநாத் போலீசாருக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதைப் பயன்படுத்தி உத்தரப்பிரதேச போலீசார் அடிக்கடி என்கவுண்டர் நடத்தி வருகின்றனர். 2017-ம் ஆண்டு மார்ச் முதல் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை, ஓராண்டில் உத்தரப்பிரதேசத்தில் எத்தனை என்கவுண்டர்கள் நடந்தன என்று ஆய்வு செய்யப்பட்டன.
அதில் 1,144 முறை போலீசார் என்கவுண்டர் நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. லக்னோ மாவட்டத்தில்தான் அதிக என்கவுண்டர்கள் நடந்துள்ளன.
மீரட், ஷம்லி, முசாபர்நகர், பக்பத், சகரன் பூர், பலந்த்சாகர், காசியாபாத், நொய்டா மாவட்டங்களிலும், என்கவுண்டர் மூலம் ரவுடிகள், சமூக விரோதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
போலீசாரின் இந்த கடுமையான நடவடிக்கைக்கு அஞ்சி தற்போது குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரும், காவல்துறையினரின் ஹிட்லிஸ்டில் உள்ள ரவுடிகளும் அடிக்கடி காவல்நிலையங்களுக்கு தாமாகவே சென்று ஆஜர் ஆகி வருவதாகவும், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்றும் திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும் போலீசாருக்கு உறுதி கூறுவதாகவும் சீதாபூர் காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் குல்கர்னி தெரிவித்துள்ளார்.
சில குற்றவாளிகள் காவல்நிலையத்திலேயே இரவில் தூங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் 1,144 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2744 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவுடிகளை கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட மோதலில் 4 போலீசார் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், 247 காவலர்கள் ரவுடிகளால் காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர் தற்போது காவல்துறைக்கு அஞ்சி சட்டத்தினை மதித்து நடந்து வருவதாகவும் சிலர் வழக்குகளின் விசாரணையில் காவல்துறையினருக்கு உதவி வருவதாகவும் கண்காணிப்பாளர் ஆனந்த் குல்கர்னி தெரிவித்துள்ளார்.