திங்கள், 2 ஏப்ரல், 2018

ஜிசாட்-6 ஏ செயற்கைக்கோளின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது! April 1, 2018

Image

ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைக்கோளின் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

எஸ் பேண்ட் வசதியுடன் கூடிய அதி நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட் 6ஏ செயற்கைகோளை, கடந்த வியாழக்கிழமை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து, ஜிஎஸ்எல்வி எஃப்8  ராக்கெட் மூலம் விண்ணில் இஸ்ரோ செலுத்தியது. 

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிலையில், ஜிசாட் 6 ஏ செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தது. 

எனினும், இரண்டாம் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோளுக்கும் இஸ்ரோவுக்கும் இடையே தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, இஸ்ரோ தலைவர் சிவன், விஞ்ஞானிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 

மேலும், செயற்கைக்கோளுடன் தகவல் தொடர்பு துண்டிப்பை இஸ்ரோ உறுதிப்படுத்திய நிலையில், அதனை சீரமைக்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.