பெட்ரோல் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, இதேபோல், டீசல் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
உள்ளூர் வரிகள் உட்பட தலைநகர் டெல்லியில், பெட்ரோல் விலை 73 ரூபாய் 73 காசுகளாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அதிக விலையாக இது உள்ளது.
டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, ஒரு லிட்டர் 64 ரூபாய் 58 காசுகளுக்கு விற்கப்படுகிறது.
தெற்காசிய நாடுகளில் அதிக விலைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்கப்படுவது இந்தியாவில் மட்டுமே, என தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில், 50 சதவீதம் வரியாக வசூலிக்கப்படுவதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
கடந்த 2014ஆம் நவம்பர் மாதம் மற்றும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களுக்கு இடையிலான காலகட்டத்தில் 9 முறை பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு, கடந்த அக்டோபர் மாதம் கலால் வரியில் 2 ரூபாய் குறைக்கப்பட்டது.
கலால் வரி குறைப்பை தொடர்ந்து பெட்ரோல் மீது மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியை குறைத்துக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது, இருப்பினும் மகராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் என 4 மாநிலங்கள் மட்டுமே வாட் வரியை குறைத்தன. எஞ்சிய மாநிலங்கள் இக்கோரிக்கையை நிராகரித்தன.
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகமாக இருப்பதாலேயே இந்த விலை உயர்வு இருப்பதாக கூறப்படுகிறது.