ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

தமிழகத்தில் தொடங்கியது மீன்பிடித் தடைக்காலம்! April 15, 2018

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் நேற்று நள்ளிரவு தொடங்கியது.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஆண்டுதோறும் 60 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. 

இந்த ஆண்டு தடைக்காலம் நேற்று நள்ளிரவு தொடங்கிய நிலையில், வரும் ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவு வரை நடைமுறையில் இருக்கும்.  

மீன்பிடி தடைக்காலத்தில், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி, கன்னியாகுமரி வரையுள்ள கடற் பகுதிகளில், விசைப் படகு மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.  

ஆனால், இந்த தடை, நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்களுக்கு பொருந்தாது. இந்த தடைக்காலத்தில் படகு மற்றும் வலைகளைச் சீரமைக்க, மத்திய, மாநில அரசுகள், மானியத்துடன் கூடிய கடன் வழங்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மீன்பிடி தடை காலத்தை ஒட்டி, கடலூர் மாவட்ட மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், தங்களது படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

மீன்பிடித் தடை காலத்தை ஒட்டி, தங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை அரசு 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று, தூத்துக்குடி மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.