வெள்ளி, 23 அக்டோபர், 2020

பெரம்பலூரில் 100-க்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு!

Image

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் டைனோசர் முட்டை மற்றும் புதிய கல்மரம் கண்டறியப்பட்டது.

பெரம்பலூர் ,அரியலூர் மாவட்டங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கடல் பகுதியாக இருந்ததற்கான ஆதாரமாக பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில், சாத்தனூர் கிராமத்தில் கல்மரம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு தொல்லியல் துறையினர் சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில்
 வெங்கட்டான் குளத்தை ஆழப்படுத்தும் பணி நடைப்பெற்றபோது  அம்மோனைட் எனப்படும் கடல்வாழ் நத்தைகளின் படிமங்கள் மற்றும் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், குன்னம் கிராமத்தில் ஆனைவாரி ஓடையில் நடுப்பகுதியில் பாறைகளுக்கிடையே புதைந்த நிலையில் கல்மரம் ஒன்றும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கல் மரமானது தற்போது ஏழு அடி நீளம் மட்டுமே இருக்கின்றது .இந்த ஓடையில் 20 அடி அகலத்தில் இந்த கல் மரமானது இருந்திருக்க வேண்டும். 

காலமாற்றத்தில் மீதமுள்ள 13 அடி மரமானது நீரில் அடித்துச் சென்று சிதைந்து போயிருக்கவேண்டும். அவை பாறையின் மேற்பரப்பில் முழுமையாக வெளிப்பட்டு இருந்ததால் அவை சிதைந்து இருக்கக்கூடும். இந்த 13 அடி கல்மரம் அந்தப் பாறையில் புதைந்து இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றது என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்-க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் இதனை பாதுகாத்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.