மதுரை மாவட்டம் பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பேரையூரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் சகோதரர் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் அது தொடர்பான விசாரணைக்காக ரமேஷை சாப்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதன் பிறகு வீடு திரும்பாத ரமேஷ் வீட்டின் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
காவல் துறையினர் சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தாக்கியதால் ரமேஷ் உயிரிழந்ததாகவும் எனவே அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரி ரமேஷின் சகோதரர் சந்தோஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சட்டவிரோத காவல் மரணம் என புகார் அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் முழு உடற்கூராய்வையும் ஏன் வீடியோ பதிவு செய்யவில்லை? என நீதிபதி கேள்வியெழுப்பினர். பின்னர், நெல்லை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் செல்வமுருகன், பிரசன்னா ஆகியோர் ரமேஷின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்யவும் அதனை முழு வீடியோவாக பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டனர்.