நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஒப்புக்கொண்டுள்ளார்.
சமூக ஊடகம் வாயிலாக பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் ஆரம்ப கட்டத்தில் நல்ல கட்டுப்பாடுகளை கொண்டிருந்த கேரளாவில் தற்போது நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
ஓணம் பண்டிகையின் காரணமாக கேரளாவின் நிலைமை முற்றிலும் மாறியுள்ளதாக கூறிய ஹர்த்வர்தன், இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, வருகின்ற பண்டிகை காலங்களில் மற்ற மாநிலங்கள் கவனமாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதாகவும், ஆனால், நாடு முழுவதும் இந்த நிலை இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய, ஐசிஎம்ஆர் கிளைகள் மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவற்றின் உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அந்த குழு வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதன் உச்சம் தொட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்பட்டால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றும், பாதுகாப்பு முறைகள் தொடர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டால், பிப்ரவரி இறுதிக்குள் குறைந்த கொரோனா பாதிப்புகளுடன் தொற்றானது கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று முடிவடையும் காலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 5 லட்சமாக இருக்கும் என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.