செவ்வாய், 27 அக்டோபர், 2020

ஓபிசி பிரிவினருக்கான 50% இடஒதுக்கீட்டு விவகாரத்தில் தலையிட வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தலையிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் மாநிலங்களின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இந்தக் கல்வியாண்டில் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது கவலையடையச் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாததால், ஆயிரக்கணக்கான மாணவர்கள், மருத்துவத் துறையில் மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பினை இழப்பதாகத் தெரிவித்துள்ள அவர், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மாணவர்கள் மருத்துவம் கற்பதற்கும், நாட்டுக்குச் சேவை செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படவில்லையெனில் அது நம் நாட்டுக்குக் கற்பனை செய்து பார்த்திட முடியாத இழப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.

எனவே வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் மருத்துவக் கனவில் இருப்போர் இந்தக் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்