எல்கர் பரிஷத் – பீமா கோரேகான் வழக்கில் தேசிய புலனாய்வு முகமை வியாழக்கிழமை 7வது நபராக 83 வயதான ஃபாதர் ஸ்டேன் ஸ்வாமியை கைது செய்துள்ளது. அவரை ராஞ்சியில் இருந்து விசாரணைக்கு காவலில் எடுத்துள்ளனர்.
ஸ்டேன் ஸ்வாமி யார்? அவர் என்ன விதமான பணியை செய்தார்?
ஃபாதர் ஸ்டேன் ஸ்வாமி ஒரு கிறிஸ்தவ பாதிரியார். இவர் ஜார்க்கண்டைச் சேர்ந்த பழங்குடியினர் உரிமைகள் செயல்பாட்டாளர் ஆவார். இவர் நிலம், காடு மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக ஆதிவாசி சமூகங்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து 3 தசாப்தங்களுக்கும் மேலாக அம்மாநிலத்தில் பணியாற்றியுள்ளார். அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையை அமல்படுத்தாததை கேள்விக்குள்ளாக்குவதும் இதில் அடங்கும். இது மாநிலத்தில் அவர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டுக்காக ஆதிவாசி சமூகத்தின் முழு உறுப்பினர்களுடன் ஒரு பழங்குடியினர் ஆலோசனைக் குழுவை அமைப்பதை வலியுறுத்துகிறது.
என்.ஐ.ஏ அவரைக் காவலில் எடுப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் அளித்த அறிக்கையில், ஆயிரக்கணக்கான இளம் ஆதிவாசிகள் மற்றும் பூர்வகுடி மக்களை விசாரணை முகமை நக்சல்கள் என்று முத்திரை குத்தி கண்மூடித்தனமாக கைது செய்வதை எதிர்ப்பதாக ஸ்டேன் ஸ்வாமி கூறினார்.
இதுபோன்ற அனைத்து கைதிகளையும் சொந்த ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்றும் விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என்றும் கோரி ஸ்வாமி அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களை விசாரிக்க நீதித்துறை ஒரு ஆணையத்தை அமைக்கவும் அவர் கோரியிருந்தார்.
ஸ்வாமியின் பணியில் நில வங்கிகள் அமைப்பதற்கான எதிர்ப்பும் அடங்கி இருந்தது. இது சிறு மற்றும் பெரிய தொழில்களை அமைப்பதற்கு சமூகத்திற்கு சொந்தமான நிலங்களை எடுக்கும் என்று அவர் வாதிட்டார்.
அரசாங்கத்தின் பல கொள்கைகள் மற்றும் அரசியலமைப்பை மீறும் வகையில் இயற்றப்பட்ட சட்டங்களுடன் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதில் அவரது பணி சம்பந்தப்பட்டிருப்பதாக ஸ்வாமியின் அறிக்கை கூறுகிறது.
“இதுதான், அரசு என்னை சிறையில் அடைக்க ஆர்வமாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்று நான் நம்புகிறேன். மோசமான வழக்குகளில் என்னை சிக்க வைப்பதும் ஏழை அப்பாவி ஆதிவாசிகளுக்கு நீதி வழங்குவதற்கான நீதித்துறையின் நடவடிக்கையையும் நிறுத்துவதும்தான் அதன் வழியாக உள்ளது” என்று ஸ்வாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
என்ஐஏ அவரை எந்த வழக்கில் காவலில் எடுத்துள்ளது?
எல்கர் பரிஷத் / பீமா கோரேகான் வழக்கு தொடர்பான விசாரணையை நடத்திவரும் என்.ஐ.ஏ, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் 2018ம் ஆண்டு முதல் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் சமூகங்களுடன் பணிபுரிந்த சமூக செயற்பாட்டாளர், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் உட்பட இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்; டெல்லி பல்கலைக்கழக இணை பேராசிரியர் ஹனி பாபு; மற்றும் கபீர் கலா மஞ்ச் என்ற கலாச்சார குழுவின் 3 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 1, 2018-ம் தேதி, 1818 ஆம் ஆண்டில் பேஷ்வாக்களுக்கு எதிராக பெருமளவு தலித் சமூகத்தைச் சேர்ந்த வீரர்களைக் கொண்ட பிரிட்டிஷ் ராணுவம் வெற்றி பெற்ற பீமா கோரேகான் போரின் 200 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான தலித்துகள் புனே அருகே கூடியிருந்தனர். அப்போது, ஏற்பட்ட வன்முறையில் கூடியிருந்தவர்களின் வாகனங்கள் எரிக்கப்பட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
நேரில் கண்ட சாட்சிகளைத் தொடர்ந்து, ஜனவரி 2ம் தேதி பிம்ப்ரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி இந்துத்துவா தலைவர்கள் மிலிந்த் எக்போட் மற்றும் சம்பாஜி பிடே ஆகியோர் பெயரை சேர்த்தது.
இருப்பினும், ஜனவரி 8ம் தேதி, புனே காவல்துறையினரால் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது டிசம்பர் 31, 2017ம் தேதி புனேவில் உள்ள சனிவார் வாடாவில் எல்கர் பரிஷத் என்று அழைக்கப்பட்ட நிகழ்ச்சியின் காரணமாக வன்முறை நடந்ததாகக் கூறியது. மாவோயிச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்டதாகவும் கூறி புனே காவல்துறை சமூக செயல்பாட்டாளர்களைக் கைது செய்தது.
ஸ்வாமிக்கு எதிரான குற்றச்சாட்டு என்ன?
கடந்த இரண்டு மாதங்களில் பாகைச்சாவில் உள்ள பாதிரியார் இல்லத்தில் ஸ்வாமி என்பவரை என்.ஐ.ஏ பல முறை விசாரித்தது. மாவோயிஸ்ட் சக்திகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி என்.ஐ.ஏ-வால் அவரது இல்லத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன.
மாவோயிஸ்டுகளுடனான தொடர்பைக் குறிக்கும் வகையில் தனது கணினியிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி என்.ஐ.ஏ பல சாறுகளை தனக்கு முன் வைத்ததாக ஸ்வாமி கூறியுள்ளார். “இவை அனைத்தும் என் கணினியில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட பொய்யான சான்றுகள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். நான் அவர்களின் குற்றச்சாட்டை மறுத்துவிட்டேன்” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மாவோயிஸ்ட் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும், அவர் ஒருபோதும் தான் பீமா கோரேகானுக்கு சென்றதில்லை என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
“எனக்கு நடப்பது தனிப்பட்டது அல்ல என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். பல செயல்பாட்டாளர்கள், வக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர் தலைவர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகள், ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக நின்று நாட்டின் ஆளும் சக்திகளுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நபர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்” என்று ஸ்வாமி கூறினார்.