சனி, 31 அக்டோபர், 2020

மும்பை சாலையில் ஒட்டப்பட்ட பிரான்ஸ் அதிபரின் போஸ்டர்கள் !

 கார்டூர் சர்ச்சை விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனில்  கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மும்பையில் உள்ள பிரதான  சாலையில் அவரது போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரான்ஸில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடம் காட்டி  பேச்சு , கருத்து சுதந்திரம் தொடர்பாக விவாதம் நடத்திய சாமுவேல் பேட்டி  என்ற 46 வயதான பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரை கடந்த 16-ஆம் தேதி 18  வயது மாணவர் ஒருவர் தலைதுண்டித்து கொலை செய்தார். அந்த நபரை  காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் ஐஎஸ் இயக்கத்துடன்  தொடர்புடையவர் என கூறப்பட்டது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

 

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த பிரான்ஸ் அதிபர்  இமானுவேல் மேக்ரோன், இதனை இஸ்லாமிய பயங்கரவாதம் என குற்றம்  சாட்டினார். பிரான்ஸ் அதிபரின் இந்த கருத்துக்கு ஈரான், துருக்கி, செளதி  அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம்  தெரிவித்தனர். மேலும் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என  துருக்கி அதிபர் எர்டோகன் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.  இதனை தொடர்ந்து பிரான்ஸ் அதிபருக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள  பல இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையின் பரபரப்பான  சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவேல்  மேக்ரோனின் படங்கள் ஒட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்டி பசாரில் உள்ள மொகமது அலி சாலையில்  ஒட்டப்பட்டுள்ள இந்த புகைப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில்  வைரலானதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த புகைப்படங்களை உடனடியாக அகற்றினர். இருப்பினும் இது தொடர்பாக யார்  மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.