ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு துவங்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவேறியுள்ளது. இந்த மகத்தான நாளை நினைவு கூறும் வகையில் ரூ. 75 நாணயத்தை இன்று வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்நாளை ஒட்டி நடத்தப்பட்ட இணையவழி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் 17 புதிய பயிர் வகைகளை அறிமுகம் செய்து பேசினார். மேலும் விவசாய பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் [எம்எஸ்பி] கொள்முதல் செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக பேசினார்.
மேலும் படிக்க : கடனும் இல்லை, காரும் இல்லை… மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களை கைவிட முடியாது என்று விவசாயிகள் முடிவு செய்திருப்பதை தொடர்ந்து இது குறித்து அவர் பேசியுள்ளார்.
“எம்.எஸ்.பி மற்றும் அரசாங்கத்தின் கொள்முதல் ஆகியவை நாட்டின் உணவுப் பாதுகாப்பில் மிக முக்கிய பகுதியாகும். இது சிறந்த வசதிகளுடன் மற்றும் விஞ்ஞான வழியில் தொடர்ந்து செயல்படுவது முக்கியம். இதை நோக்கி செல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம், ” என்றும் கூறினார் மோடி. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக தினை மற்றும் அதிக ஊட்டச்சத்து பயிர்களை வளர்க்க மத்திய அரசு ஊக்குவிக்கும் திட்டங்கள் குறித்து யோசித்து வருவதாகவும் கூறினார்.