வியாழன், 29 அக்டோபர், 2020

சர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு

 அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (எபிவிபி) தலைவரும், கீழ்பாக்கம்  அரசு மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சை புற்றுநோயியல் தலைவருமான டாக்டர் சண்முகம்  சுப்பையாவை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவராக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நியமிக்கும் அறிவிப்பை இன்று வெளியிட்டது.

 

சண்முகம் சுப்பையா நியமனத்திற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

முன்னதாக, சண்முகம் சுப்பையா மீது 62 வயது நிரம்பிய பெண் ஒருவர் ஆலந்தூர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ” கார் பார்க்கிங் தொடர்பான மோதளால், சண்முகம் தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தாகவும், அறுவை சிகிச்சையில் பயன்படுத்திய முகக்கவசம் மற்றும் இதர குப்பைகள் தனது வீட்டு வாசலில் கொட்டி விட்டு சென்றதாகவும்”  தெரிவித்தார். இதுக் குறித்த சிசிடிவி காட்சிகளையும் அவர் காவல்துறையிடம்  சமர்பித்திருந்தார்.

இந்த விஷயம் தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. சம்பவம் நடைபெற்ற ஜூன மாதத்தில் தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகளவில் பதிவு செய்யப்பட்டு வந்தது. ஊரடங்கு காலத்தில் ஒரு மருத்துவரே இத்தகைய செயல்களை செய்யலாமா? என்ற கேள்வியும் எழுந்தது.

எனவே, சண்முகம் சுப்பையா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழுவில் நியமித்திருப்பதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பெண்ணை துன்புறுத்திய குற்றச் சாட்டில் வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம்: இது பெண்களை அவமதிப்பதில்லையா? என்று விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினர்.

 

 

ஜோதிமணி:  

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ஒரு பெண்வீட்டின் முன் சிறுநீர்கழித்து அவரிடம் ஆபாசமாக, அறுவெறுப்பாக நடந்துகொண்ட பிஜேபியின் சண்முகம் சுப்பையாவை உடனடியாக மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

 

கனிமொழி :  

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டரில், “அநாகரிக நடத்தைக்கான ஒப்புதலா? பிற பாஜக உறுப்பினர்களும் இத்தகைய செயலை பின்பற்றுவதற்கான ஊக்கத் தொகையா? ” என்று கேள்வி எழுப்பினார்.

 

 

திமுக தலைவர் மு. க ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை “எய்ம்ஸ்” மருத்துவமனை நிர்வாகக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் நியமிக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படவிருக்கிறது. பா.ஜ.க. எனும் அரசியல் கட்சியின் சொந்தப் பணத்தில் அல்ல!

அப்படியிருக்கும் போது – ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த – அதுவும் ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு அநாகரிகமாக – அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் என்ற பெயரில் இருக்கும் சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம்! பெண்களின் கண்ணியம் குறித்தோ, அவர்களுக்குக் கவுரவம் அளிக்க வேண்டும் என்பது பற்றியோ, எந்தக் காலத்திலும் பா.ஜ.க. கவலைப்படுவதில்லை என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாக அமைந்து விட்டது.

பெண்ணினத்திடம் பா.ஜ.க.விற்கு இருக்கும் வெறுப்புணர்வை இந்த நியமனம் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. இதுதான் பா.ஜ.க. “பிராண்ட்” கலாச்சாரமா?
பெண்ணை அவமானப்படுத்திய மருத்துவர் சுப்பையா சண்முகம் இடம்பெற்றுள்ள குழுவிற்கு, எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியின் துணை வேந்தராக இருக்கும் மரியாதைக்குரிய டாக்டர் சுதா சேசையன் அவர்களையும் உறுப்பினராக நியமித்து அவரையும் மத்திய பா.ஜ.க. அரசு அவமானப்படுத்தியிருக்கிறது.

பெண்களின் பெருமை குறித்த உயர்ந்த சிந்தனை கொண்ட  சுதா சேசையன் அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவிலிருந்து விலகி விடுவதுதான் அவருக்கும் கண்ணியம்; அவர் இதுவரை கட்டிக்காத்து வந்த நேர்மைக்கும் அடையாளமாக இருக்கும்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவினை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அக்குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் இடமளித்து – ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்கி விட்டு – தமிழக எம்.பி.க்களுக்கு நிர்வாகக்குழுவில் இடமளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கத்தில் உருப்படியான நடவடிக்கை எதையும் கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக முன்னெடுக்காத மத்திய பா.ஜ.க. அரசு, இப்படிப்பட்ட கோணல் புத்தியுள்ள ஒருவரை நிர்வாகக் குழுவில் இணைத்து, பெண்ணினத்தை அவமானப்படுத்திடும் வகையில் அமைத்திருப்பது, தமிழர் பண்பாட்டு அடையாளமாம் கற்புக்கரசி கண்ணகி நீதி கேட்ட மூதூர் மதுரை மாநகரத்தையே அதிர்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

 

மதுரை எய்ம்ஸ்:  

1,264 கோடி ரூபாய் செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது. இதற்கான, அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.

இந்த மருத்துவமனையில், 15 முதல் 20 அதிநவீன மருத்துவத் துறைகள் அமையவுள்ளன. இந்த மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. அதோடு மட்டுமன்றி, இது மருத்துவக் கல்லூரியாகவும் திகழவிருப்பதால், 100 எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்புக்கான இடங்களும், 60 பி.எஸ்.சி செவிலியர் பட்டப் படிப்புக்கான இடங்களும் உருவாக்கப்பட உள்ளன. இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 1500 வெளி நோயாளிகள் மற்றும் மாதம் ஒன்றுக்கு 1000 உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்படும்