மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் போராடி தமிழக மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும் என்பதால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மாநில உயர்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ” பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் மாநிலத்தின் தலைசிறந்து விளங்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால், இடஒதுக்கீடு முறை கேள்விக்குறியாகும்… கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.
உயர் சிறப்பு அந்தஸ்து கல்வி திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை, சர்வதேச தரத்துக்கு மாற்ற, பல்கலை மானியக் குழு 10 பொது துறை மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்களை உயர் சிறப்பு அந்தஸ்து நிறுவனங்களாக அறிவித்துள்ளது.
இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் எம்.கே சுரப்பா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், “உயர் சிறப்பு அந்தஸ்து அங்கீகாரத்தால் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் தற்போதைய அம்சங்களில் மாற்றம் ஏற்படாது என்று மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கனவே தெளிவுபடுத்தியது” என்று கூறினார்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தானாக முன்வந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நடந்துகொண்ட விதம் ஒழுங்கீனமான நடவடிக்கை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“ஐந்தாண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் தானாகவே 1500 கோடி ரூபாய் நிதியைத் திரட்டிக் கொள்ள முடியும்” என்று மத்திய அரசுக்கு துணை வேந்தர் சூரப்பா எழுதிய கடிதத்தையும் அவர் கேள்வி எழுப்பினார்.
உயர் சிறப்பு அந்தஸ்து கல்வி திட்டத்தின் சில நெறிமுறைகளால், பல்கலைக்கழகத்தின் பல்வேறு விசயங்களில் (இடஒதுக்கீட்டைத் தாண்டி) மாநில அரசின் அதிகாரம் பாதிக்கக்கூடும் என்று தமிழக அரசு கருதுவதாக மாநில உயர்கல்வித் துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த கல்வித் திட்டத்தால் மத்திய அரசின் நிதிப்பங்கு அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துணை வேந்தர் சூரப்பாவின் நெருங்கிய வட்டாரங்கள் இதுகுறித்து கூறுகையில், ” அச்சங்கள் மற்றும் தயக்கங்கள் காரணமாகத் தான் தமிழக அரசு தனது ஆட்சேபனையை முன்வைத்துள்ளது. மத்திய அரசுக்கு நேரடியாக துணை வேந்தர் கடிதம் எழுதியதில் எந்தவொரு நடைமுறை சிக்கல்களும் இல்லை. உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் நிதி கிடைத்திருக்கும்,”என்று தெரிவித்தது.
ஐ.ஐ.டி-ரோபரின் முன்னாள் இயக்குநரும், பெங்களூர் – ஐ.ஐ.எஸ்.சி கல்வி நிறுவனத்தின் கவுரவ பேராசிரியருமாக பணியாற்றிய கர்நாடகாவைச் சேர்ந்த சுரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தில், தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் மிகவும் தன்னிச்சையாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. மேலும், மாநிலத்தின் தலை சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் பதவிக்கு ஒரு தமிழகத்தை சேர்ந்தவர் ஏன் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். தமிழ்நாட்டில, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக துணை வேந்தர் நியமனம் வெறும் அரசியல் முடிவுகளாக இருந்தன என்றும், சமீப காலங்களில் பல துணை வேந்தர்கள் ஊழல் மற்றும் முறைகேடுகளில் தொடர்பு கொண்டிருந்தனர். அதன் காரணமாக, சூரப்பா நியமனத்தை பல கல்வியாளர்களும் ஆதரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.