வெள்ளி, 23 அக்டோபர், 2020

ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டனப் போராட்டத்தில் - திமுக தலைவர் ஸ்டாலின்

 மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீட்டு விவகாரத்தில், ஒரு மாதமாகியும் மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை. இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு மாதம் காலம் அவகாசம் தேவை என்று ஆளுநர் கூறியிருப்பது, தமிழ்நாடு அரசியல் காட்சிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநரின் இந்த பதில் உள் இட ஒதுக்கீடு மசோதாவையே நீர்த்துப் போகச் செய்யும் என்பதனால் நாளை காலை 10 மணி அளவில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டனப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று, வடதமிழகப் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான வரையிலான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் புதிய சோதனை ஒன்றை வடிவமைத்துள்ளது ஐ.ஐ.டி. காரக்பூர். உயர்தர மூலக்கூறு ஆய்வில் ஒரு மாற்றத்தை இந்த கருவி கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த சோதனை முறையின் செயல்திறனை உறுதிப்படுத்தியுள்ளது என்று ஐ.ஐ.ஐ.கே.ஜி.பி. அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான  இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியானது. இதில், சுமார் 13,415 இடங்கள் நிரப்பப்பட்டதாக கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.