வெள்ளி, 30 அக்டோபர், 2020

பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை

 தமிழக பாஜக நவம்பர் 6ம் தேதி திருத்தணியில் இருந்து தொடங்கவுள்ள வெற்றிவேல் யாத்திரையை தடை விதிக்கக் கோரி விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ச் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் பாலகிருஷ்ணன் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சமீபத்தில், திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வெற்றிவேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவித்தார். இந்த வெற்றிவேல் யாத்திரை திருத்தணியில் நவம்பர் 6ம் தேதி தொடங்கி திருச்செந்தூரில் டிசம்பர் 6ம் தேதி முடிவடையும் என்று அறிவித்தார். மேலும், இந்த வெற்றிவேல் யாத்திரையில் பாஜகவின் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெற்றிவேல் யாத்திரைக்கான பிரசாரப் பாடல் வீடியோவும் வெளியிடப்பட்டது.

பாஜக நடத்த உள்ள இந்த வெற்றி தமிழகத்தில் அமைதியைக் கெடுக்கும் நோக்கத்தில் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக சார்பில் நவம்மர் 6 முதல் தொடங்கி நடத்தப்படவுள்ள ‘வேல் யாத்திரை’ தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. எனவே, இதற்குத் தமிழக அரசு அனுமதியளிக்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை பாஜகவும் அதன் ஆதரவு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளன. பாஜக ஆதரவாளர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார், அண்ணா, திருவள்ளுவர் முதலானோர் உருவச் சிலைகளுக்குக் காவிச் சாயம் பூசியும், காவி ஆடையைப் போர்த்தியும் அவமரியாதை செய்து சமூக பதற்றத்தை ஏற்படுத்தினர்.

சிலர் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டு பிற சமயத்தினர் தாக்கியதாகப் பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். இப்போது வேல் யாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் எனத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

கடந்த ஜனவரி மாதத்தில் திருச்சியில் விஜய் ரகு என்ற பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னால் முஸ்லிம் அமைப்புகள் இருப்பதாக எச்.ராஜா , முரளிதர ராவ் உள்ளிட்ட பாஜக உயர்மட்ட நிர்வாகிகளே வெளிப்படையாகக் குற்றம்சாட்டினர். ஆனால் மிட்டாய் பாபு என்பவரும் அவரது குழுவினரும்தான் அந்தக் கொலையைச் செய்தார்கள் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது என்றும் காவல்துறையால் கண்டறியப்பட்டது.

கடந்த மே மாதத்தில் கோயம்புத்தூரில் கவுண்டம்பாளையம் என்னும் இடத்தில் உள்ள வேணு கோபால கிருஷ்ணசாமி கோவில் முன்பு பன்றி இறைச்சியை யாரோ வீசி விட்டனர். அந்த சம்பவத்தை வைத்து அங்கே ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பன்றி இறைச்சியை வீசியவர் ஹரி என்றும் அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான் என்றும் சிசிடிவி காட்சிகள் மூலமாகக் காவல்துறை கண்டறிந்து அவரைக் கைது செய்தது.

கடந்த செப்டம்பர் 15ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரங்கநாதன் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதைவைத்து மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சி செய்தனர். ஆனால் அந்தக் கொலைக்கு அரசியல் காரணம் எதுவுமில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த செப்டம்பர் 13ம் தேதி கோயம்புத்தூர் ஆவாரம்பாளையம் பிஜு என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர் இந்து முன்னணி ஆதரவாளர் என்பதால் அவரை வேறு மதத்தவர்கள் கொலை செய்துவிட்டனர் என்று பிரச்சனை கிளப்பினார்கள். ஆனால் அந்த கொலைக்கு முன் விரோதமே காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ராமநாதபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் அருண்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதற்கும் மற்ற மதத்தினரைக் குற்றம்சாட்டி பாஜக மற்றும் அதன் ஆதரவு இயக்கங்கள் பிரச்சினை உண்டாக்கினார்கள். போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அருண்குமார் இதற்குப் பின்னால் மதரீதியான காரணம் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்தார். அதனால் அம்பலப்பட்டுப்போன பாஜகவினர் ஆளுங்கட்சியிடம் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறை கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்ய வைத்தனர்.

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த ஏழெட்டு மாதங்களில் பாஜக செய்த சில முயற்சிகளை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளோம். காவல்துறையிடம் இதைவிட நீண்ட பட்டியல் இருக்குமென நம்புகிறோம்.

அரசியல் ஆதாயத்திற்காக மக்களைப் பிளவுபடுத்தி மோதலை உருவாக்கும் பாஜகவின் இந்த சதித் திட்டத்துக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது. உடனடியாக வேல் யாத்திரையைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” இவ்வாறு கூறியுள்ளார்.

பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணனும் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பாஜக நாடு முழுவதும் நடத்தி இருக்கும் யாத்திரைகளை தொடர்ச்சியாக கவனித்துவரும் எவருக்கும் அவர்களின் நோக்கம் பளிச்சென்று விளங்கும். இந்தியா முழுமைக்கும் அவர்கள் யாத்திரை நடத்துகிற போது வழிநெடுக இந்திய மக்களின் கொள்கையும் சபைகளும் கொட்டிக்கிடந்த வரலாறு பதிவு செய்திருக்கிறது.

தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு அவர்களே குண்டு வைத்தது, திருப்பூரில் தன் சொந்த கட்சிக்காரரின் தற்கொலையை அரசியல் மற்றும் மத அடிப்படையிலான கொலை என்று விளம்பரம் செய்து கலவரம் செய்ய முயற்சித்தது, ராமநாதபுரத்தில் தனி நபர்களுக்கு இடையிலான மோதலை மத மோதலாக சித்தரித்து வன்முறையைத் தூண்ட முயற்சித்தது. பாஜகவின் சில நிர்வாகிகளை தங்கள் வீட்டில் குண்டு எறிந்து சிறுபான்மை மக்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து எனவே போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கோரியது என இவர்களுடைய வரலாறு முழுவதும் வன்முறையைத் தூண்டுவதும் அந்தப் பழியை இதர இயக்கங்கள் மீது திணிப்பதுமாகவே இருந்து வந்திருக்கிறது.

இது ஒருபுறமிருக்க கொரோனா காலத்தில் 100 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் வட மூலையிலிருந்து தென் மூலை வரை கட்டுப்பாடுகள் இருக்கும் இந்த காலத்தில் யாத்திரை நடத்த அனுமதிப்பது அவர்களின் விஷம் கலந்த பிரசாரத்தை பரப்புவதோடு கொடிய நோயையும் பரப்புவதற்கு ஏதுவாக அமைந்து விடும்.

எனவே, நோய் பேரிடர் காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி கலவர அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.” என்று தெரிவித்துள்ளார்.