இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் தரக்கூடாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நந்தகுமார் எழுதிய கடிதத்திற்கும், பாஜகவிற்கும் சம்பந்தமில்லை என்றும், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் எழுதிய கடிதத்தில் பாஜக பற்றிய குறிப்பில்லை என்றும் தமிழக பாஜக கட்சித் தலைவர் எல். முருகன் விளக்கம் கொடுத்தார்.
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழு புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு மசோதா ஆளுநருக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு, இதுவரை தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. திமுக, மதிமுக, தமிழக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் என அனைத்து எதிர்க்கட்சியினரும் சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதிருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க கேட்டுக்கொள்கிறேன் என்று மாநில தலைவர் எல்.முருகன் இன்று ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.
மேலும், தமிழக பாஜக துணைத் தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ” கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உடனடியாக அனுமதித்து, மாணவர்களின் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்க மேதகு ஆளுநரை நான் கேட்டுக்கொள்கிறன். மிக முக்கியமான இதை, இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழக பாஜகவின் கல்விப் பிரிவு தலைவர் நந்தகுமார் தமிழக ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், ” நீட் தேர்வில் தமிழ்க கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் தரக் கூடாது எனவும், ஒப்புதல் வழங்கினால் நீதிமன்றத்துக்குப் போய் தடையாணை பெறுவோம்” என்று வலியுறித்தினார்.
இக் கடிதம், தமிழக அரசியலில் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நந்தகுமாரின் இந்த கடிதம் தமிழக பாஜகவின் இரட்டை வேடத்தை அடிக்கோடிட்டு காட்டுவதாகவும், ஏழை மக்களின் மருத்துவக் கனவு வாக்கு அரசியலால் சிதையுண்டு போகிறது என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நந்தகுமார் எழுதிய கடிதம் குறித்து எல். முருகன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள எழுதிய கடிதத்திற்கும், பாஜகவிற்கும் சம்பந்தமில்லை என்றும், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் எழுதிய கடிதத்தில் பாஜக பற்றிய குறிப்பில்லை என்று தெரிவித்தார்.