வெள்ளி, 30 அக்டோபர், 2020

தமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்துகிறது?

 Arun Janardhanan

2021-ல் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர், குறைவான பிரச்சினைகள் கொண்டிருந்த பாஜக, மாநிலத்தில் மனுஸ்மிரிதி போராட்டம் வெடிப்பதற்கு சில உதவிகளைப் பெற்று வருகிறது.

தலித் தலைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன், ‘பெரியாரும் இந்திய அரசியலும்’ என்ற தலைப்பில் ஒரு சிறிய ஆன்லைன் நிகழ்ச்சியில் நிகழ்த்திய உரையில், மனுஸ்மிரிதியை மேற்கோள் காட்டி பேசினார். “சனாதன இந்து தர்மம் பெண்கள் குறித்து என்ன சொல்கிறது? என்றால், பெண்கள் அடிப்படையில் கடவுளால் விபச்சாரிகளாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்து தர்மத்தின் படி… எல்லா பெண்களும் விபச்சாரிகள்… என்று மனு தர்மம் கூறுகிறது” என்று கூறினார்.

“விபச்சாரி” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதை மனுஸ்மிரிதியின் ஒரு பழைய உரையிலிருந்து அல்லது பதிப்பிக்கப்பட்ட மனுஸ்மிரிதியின் பல மொழிபெயர்ப்புகளில் ஒன்றில் இருந்து பேச்சாளர் விளக்கியுள்ளார்.

விரைவில், பாஜக தலைவர் குஷ்பு சுந்தர், இதற்கு திருமாவளவன் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜக சட்டப்பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் புகார் அளித்த பின்னர், சென்னை நகர போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 153, 153 (ஏ) (1) (அ), 295 ஏ, 298, 505 (1) (பி) மற்றும் 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

திருமாவளவனும் திமுகவும் இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றினார்கள்?

அவரை பெண்களின் நலனுக்கு எதிரான ஒரு தலைவராக சித்தரிப்பதற்காக அவரது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு திரிக்கப்பட்டுவருவதாக திருமாவளவன் தெளிவுபடுத்தினார். விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சி பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக போராடுவதாகவும், தவறான தகவல் பிரச்சாரம் தேர்தலுக்கு முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணிக்குள் ஒரு தடுமாற்றத்தை உருவாக்குவற்காகவும் செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும், விசிக இந்தியாவில் மனுஸ்மிரிதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்ததையும் அவர் நினைவுபடுத்தினார்.

இருப்பினும், திமுக கூட்டண்இ அதன் எதிர்வினையில் அதிகமாக அளவிடப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மனுஸ்மிரிதி விமர்சனத்தை தொடவில்லை. ஆனால், திருமாவளவனுக்கு எதிரான பொய் வழக்குக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். மேலும், அவர், “காவல்துறை மத வெறியர்கள், தவறான விளக்கம் அளித்து சிதைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். திருமாவளன் மீது செய்திருக்க கூடாது” என்று கூறினார்.

மற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி கட்சியான மதிமுக தலைவர் வைகோ, சிபிஐ(மார்க்ஸிஸ்ட்) தலைவர்கள் சென்னை காவல்துறையிடம் திருமாவளவன் மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியதுடன், விசிக தலைவர் மனுஸ்மிரிதியின் பழைய உரையிலிருந்து மேற்கோள் காட்டுவதாகவும், அந்நூல் சமூகத்தில் பெண்கள் மற்றும் சமூகத்தின் பலவீனமான பிரிவுகளை இழிவுபடுத்தும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த விவகாரத்தில் பாஜக ஏன் ஆர்வமாக உள்ளது?

கேரளாவில், ஆளும் சிபிஐ (மார்க்ஸிஸ்ட்) மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளின் தாக்குதலை சந்திக்கும் கேரளா பாஜக-வைப் போல இல்லாமல், தமிழக பாஜக பிரிவு, மத்தியில் பாஜக ஆட்சி செய்வதாலும், மாநிலத்தில் ஒரு தசாப்தமாக ஆட்சி செய்யும் அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதாலும் இந்த பிரச்னையை ஒரு அளவுக்கான பரப்பில் எடுத்துள்ளார்கள். இத்தகைய சூழ்நிலையில், மனுஸ்மிரிதி சர்ச்சை பிரதான தமிழ் அரசியலில் ஒரு வெற்றிகரமான அரசியல் நடவடிக்கையாகும். இதை பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் தமிழகத்தில் இந்து வாக்குகளை பலப்படுத்துவதற்கான வாய்ப்பாக காண்பதாக கூறுகிறார். திருமாவளவனின் இந்த பேச்சு ஒரு அவர்களுக்கு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது.

பாஜக நவம்பர் 6ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டுள்ள “வெற்றிவேல்” யாத்திரை பிரச்சாரத்தின் மூலம் இந்து வாக்குகளை பலப்படுத்த பாஜக மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக இந்த சர்ச்சை எழுந்துள்ளது. ரத யாத்திரைப் போல, மாநில அரசின் முறையான அனுமதியுடன், இந்த வெற்றிவேல் யாத்திரை பழணி, சுவாமிமலை மற்றும் பழமுதிர்சோலை உள்ளிட்ட முருகனின் ஆறுபடைவீடு கோயில்களை இணைப்பதாக அடங்கியுள்ளது. இந்து வாக்குகளை பலப்படுத்த வெற்றிவேல் யாத்திரை உதவும் என்று பாஜக தலைமை எதிர்பார்க்கிறது.

மனுஸ்மிரிதி சர்ச்சையில் யார் பலனடைகிறார்கள்?

சமீபத்தில் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சுந்தர், காவிக் கட்சியில் விரைவாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக சிதம்பரம் செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திராவிடக் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான தலித்துகள், இடதுசாரிகள் மற்றும் தமிழ் தேசியவாதக் கட்சிகள் தேர்தல் அரசியலில் அவர்களின் நாத்திகம், பிராமண எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு கொள்கைகளுக்காக பெரிய அளவில் அறியப்பட்ட கட்சிகள். மாநிலத்தின் சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பு, அவர்கள் மனுஸ்மிரிதி சர்ச்சையை கையாள்வது எளிதல்ல. கேரளாவில் உள்ள சபரிமலை கோயில் பிரச்சினையில் பாஜக தொடர்ந்து ஊடுருவ முயற்சிக்கும் அதே வேளையில், திமுக அதற்கான எதிர்வினைகளில் எச்சரிக்கையாக இருந்து வருகிறது.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 7.5% உள் இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் மாநில ஆளுநர் தாமதம் செய்து வருகிறார் என்று கூறப்படும் மிகவும் முக்கியமான பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்பவும் இந்த பிரச்னை உதவியுள்ளது. இந்த மசோதா சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் நிலை குறித்து எதிர்க்கட்சியும் மாநில அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

“விபச்சாரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக திருமாவளவன் மன்னிப்பு கேட்டிருக்கலாம். நாங்கள் இதை ஒரு சர்ச்சையாக மாற்றவில்லை. இது அவர்களின் தவறான பெருமையும் மத விரோத உணர்வுகளும்தான் இதை ஒரு சர்ச்சையாக மாற்றியது. அவர்களின் இந்து விரோத நிலைப்பாட்டை அம்பலப்படுத்த நாங்கள் எங்கள் போராட்டங்களைத் தொடருவோம்” என்று ஒரு பாஜக தலைவர் கூறினார்.