தேசபக்தி உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மெஹ்பூபா முஃப்தி பேசியதாக கூறி மக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து (PDP) 3 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
PDP தலைவர்கள் டி.எஸ்.பஜ்வா, வேத் மஹாஜன் மற்றும் ஹுசைன் வஃபா ஆகியோர் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்திக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் தேசபக்தி உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மெஹபூபா பேசியுள்ளது சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்த பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள அரசியல் தலைவர்கள் பலரை வீட்டு சிறையில் வைத்தது. அதில் ஒருவரான மெஹ்பூபா முஃப்தி 14 மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் விடுதலையானார்.
பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் பேசிய போது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றாத வரை தான் தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் இந்திய தேசிய கொடியை ஏந்தப்போவதில்லை எனவும் கூறியிருந்தார்.
மெஹ்பூபாவின் இந்த பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்புகள் கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது