புதன், 14 அக்டோபர், 2020

மருத்துவப் படிப்பு ஓபிசி இட ஒதுக்கீடை இந்த ஆண்டே தமிழகத்திற்கு வழங்க முடியுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

 மருத்துவப் படிப்பில், தமிழகத்தால் அளிக்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவம், மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவினருக்கு தமிழக அரசால் நடத்தப்படும் கல்லூரிகளில் இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசு வாக்கறிஞர்களிடம் செவ்வாய்க்கிழமை கேட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் தமிழகத்தால் அளிக்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவம், மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி) வகுப்பினருக்கு தமிழக அரசால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என்று உச்ச நீதிமன்றம் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர்களிடம் மத்திய அரசை கேட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தலைவரான நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், “இந்த ஆண்டு இடஒதுக்கீடு பெற விண்ணப்பிக்க முடியுமா? இந்த ஆண்டு இடஒதுக்கீடு அளிப்பதில் உண்மையிலேயே சிரமம் உள்ளதா என்பதற்கான வழிமுறைகளை நீங்கள் மத்திய அரசிடம் கேட்டு பதிலளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் வழக்கறிஞர் கௌரவ் ஷர்மாவையும், மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பல்பீர் சிங்கையும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஜூலை மாதம், சென்னை உயர் நீதிமன்றம், ஒரு குழுவை அமைத்து அடுத்த ஆண்டில் இருந்து ஓ.பி.சி இடஒதுக்கீட்டின் சதவீதம் மற்றும் பிற விதிமுறைகளை நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்றம்இந்த ஆண்டு சேர்க்கை நடைமுறையில் இடையூறு விளைவிக்க விரும்பவில்லை என்று கூறியது. தமிழகத்தில் ஆளும் அதிமுக வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் முதல் எதிர்க்கட்சியான திமுக வழக்கறிஞர் பி.வில்சன் வரை தமிழகத்தின் பல அரசியல் கட்சிகள் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கியதும், தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர்கள் வி.கிரி மற்றும் எம்.யோகேஷ் கண்ணா ஆகியோர் இடைக்கால நிவாரணம் கோரினர். வழக்கறிஞர் கிரி நீட் தேர்வு முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம் என்று சுட்டிக்காட்டி, உடனடியான நிவாரணம் தேவை என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மற்றும் அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கும் 1993-ம் அண்டு சட்டப்படி, பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை (ஓ.பி.சி – 50%, எஸ்சி – 18%, எஸ்டி – 1%) வழங்குவதற்கு உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்ட அனைத்து சாதகமான கருத்துகளையும் சமர்ப்பித்தார். மேலும், அவர் 69% இடஒதுக்கீடு மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பயனளிக்கும் என்றார்.

மேலும், அவர் வழக்கறிஞர் வில்சன் சமர்பித்த மக்களவை ஆவணங்களைக் குறிப்பிட்டார். அதில், சுகாதார அமைச்சகம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மாநில அரசின் குறிப்பிட்ட இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதை தெரிவித்தார். வழக்கறிஞர் வில்சன் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது என்று அறிக்கை சமர்ப்பித்தார். உயர்நீதிமன்ற உத்தரவில் செப்டம்பர் 7ம் தேதி குழு அமைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

இதையடுத்து, நீதிபதி ராவ், இந்த வழக்கு விசாரணையை தசரா விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைக்க பரிந்துரைத்தார். அப்போது, வழக்கறிஞர் வில்சன், தலையிட்டு, நீட் தேர்வுக் முடிவுகள் விரைவில் வெளிவர உள்ளதால் இந்த விஷயம் பயனில்லாமல் போய்விடும் என்று கூறினார்.

“அனைத்து தரப்பினரின் உரிமைகளுக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள குழு இந்த விவகாரத்தை முடிவு செய்யும் வரை, தற்காலிக ஏற்பாடாக, மாநிலத்தால் அளிக்கப்படும் அகில இந்திய ஓதுக்கிட்டு இடங்களுக்கு, மத்திய அரசியால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் 27% இடங்களை மத்தியால் வழங்க முடியும்” வழக்கறிஞர் வில்சன் கூறினார்.

மத்திய அரசு வழக்கறிஞர் பல்பீர்சிங் வாதிடும்போது, அந்த குழு செப்டம்பர் 22ம் தேதி கூடியதாக பதிலளித்தார். அதில், உறுப்பினராக இருக்கும் தமிழகம் இட ஒதுக்கீடு சலுகைகள் குறித்த தனது முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மாநில பிரதிநிதி இன்னும் மாற்றியமைக்கப்படவில்லை. மாநில அரசு குறிப்பிட்ட இடஒதுக்கீடுகளை செயல்படுத்துவது கடினம் என்று அவர் எடுத்துரைத்தார். பல மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள ஓ.பி.சி பிரிவினருக்கு இடங்களைக் கோருகின்றன” என்று பல்பீர் சிங் வாதிட்டார். மேலும், 1993 ஆம் ஆண்டு சட்டத்தின்படி உச்ச நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீட்டில் 50% மேல் செல்லக் கூடாது என்று விதித்துள்ளது, அதே நேரத்தில் தமிழகத்தில் இடஒதுக்கீடு 69% ஆக உள்ளது என்று அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட, வழக்கறிஞர் சீனிவாசன், உயர் நீதிமன்ற தீர்ப்பை முதலில் மேல்முறையீடு செய்யாததால், இந்த சர்ச்சைகளை மத்திய அரசு மறுக்க முடியாது என்று சுட்டிக்காட்டினார். வழக்கறிஞர் சீனிவாசன் தெரிவித்த ஆட்சேபனையை நீதிபதி ராவ் ஒப்புக்கொண்டார்.