வெள்ளி, 23 அக்டோபர், 2020

கடல்வழி சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் 60% உயர்வு: இந்தியாவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும் அபாயம்!

 


கடல்வழிப் போக்குவரத்துக்கான கட்டணம் 60% வரை உயர்ந்துள்ளதால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டன. தொழில்துறைகள் முடங்கியதால் ஏற்றுமதி இறக்குமதிகள் குறைந்திருந்தன. இதனிடையே படிப்படியாக ஊரடங்கு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு தற்போது வணிகப்போக்குவரத்துகள் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. 


இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடல்வழி சரக்குப் போக்குவரத்துக்கட்டணங்கள் 60 சதவீததுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதில் ஐரோப்பிய துறைமுகங்களில் 60 சதவீதமும் தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்க துறைமுகங்களில் 50 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 40 அடி கொண்ட கண்டெய்னர்களை கடல்வழியில் கொண்டு செல்ல 22,500 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. 
 

இது இந்திய ஏற்றுமதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடல்வழி மற்றும் வான்வழி சரக்குபோக்குவரத்துக்கான கட்டணங்களை சர்வதேச நாடுகளை உயர்த்தியுள்ளதால் இந்தியாவில் உள்ள சரக்குப்போக்குவரத்துத்துறை நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் இந்திய வணிகர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். 


இதனிடையே இந்த கட்டண உயர்வு தொடர்பாக சரக்குப்போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் நேற்று மத்திய வணகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆலொசனை நடத்தினார். இதில் கட்டண உயர்வு சரக்கு அளவு பற்றாக்குறை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஏற்றுமதியாளர்களின் சரக்கு தொடர்பான விபரங்களை அளிக்குமாறும் மத்திய அரசு கோரியுள்ளது