செவ்வாய், 27 அக்டோபர், 2020

ஸ்டாலின் நடமாட முடியாதா?

 மனுஸ்மிரிதியில் இந்து பெண்களை பற்றி கூறியுள்ளதைக் குறிப்பிட்டு மனுஸ்மிரிதியை தடை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன், கூறிய நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மனுஸ்மிரிதியை தடை செய்யக் கோரி விடுதலை கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பெண்களை இழிவுபடுத்தும் ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் வெளியில் நடமாட முடியாது என்று எச்சரிக்கை விடுத்து பேசினார்.

பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “பெண்களை தவறாக பேசியவர்களை வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு எங்களுடைய தாய்மார்கள் தக்க நேரத்தில் தக்க விதத்தில் சரியான கவனிப்பு கவனிக்க காத்திருக்கிறார்கள். நீங்கள் எங்கு சென்றாலும் தமிழக சகோதரிகள் உங்களுக்கு சிறப்பான ஒரு வரவேற்பை அவர்களுடைய பாணியில் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். நீங்கள் வெளியே செல்ல முடியாது. வெளியில் நடமாட முடியாது.” என்று கூறினார்.

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வெளியில் நடமாட முடியாது” என்று பாஜக தலைவர் எல்.முருகன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்.முருகன் பேச்சுக்கு திமுகவினர் சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்து பேசிய திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திமுக ஆதரவாளர் ட்விட்டர் பயனர் ஒருவர், “தளபதி ஸ்டாலினும் திருமாவளவனும் வெளியே நடமாட முடியாது – முனைவர் L.முருகன். அவங்களுக்கும் பொலிரோ வாங்கி கொடுக்குற ஐடியா எதாவது இருக்கா ஆபிஸர்” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பயனர், “தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உங்களால் முடிந்தால் தடுத்து காட்டுங்கள் என்ன அதிகார மமதையில் மிரட்டலா ? இது தமிழ்நாடு வடநாடு கிடையாது” என்று எச்சரித்துள்ளார்.

அதே போல, இன்னொரு ட்விட்டர் பயனர், “சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என பிஜேபி மாநில தலைவர் முருகன் கூறுகிறார். நீ மு.க.ஸ்டாலினை வெளியில் நடமாட முடியாது என்கிற.. மக்களை சந்திக்க அவ்வளவு பயமா முருகன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆதரவாளர் ஒருவர், எல்.முருகனின் பேச்சு குறித்து ட்விட்டரில் பதிவிடுகையில், “ஸ்டாலின் இனி தமிழகத்தில் நடமாட முடியாது என்கிறார் எல்.முருகன். ஜெ அன்பழகன் இழப்பை உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

எல்.முருகன் பேச்சு குறித்து திமுக ஆதரவாளர் ட்விட்டரில் குறிப்பிடுகையில், “இது தான் வாய் கொழுப்பு என்பது. ரவுடிகளை எல்லாம் கட்சியில் சேர்த்துக்கொண்டு ‘வெளியே நடமாட முடியாது’ என சட்ட மன்ற எதிர்கட்சி தலைவரையே மிரட்டுகின்ற இந்த கயவனின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பயனர், “ஸ்டாலின் இனி வெளியே நடமாட முடியாது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகிறார். எல்லாரும் நல்லா பாத்துக்கங்க..நானும் ரவுடிதான் ரவுடிதான்.!” என்று எல்.முருகனை கிண்டல் செய்துள்ளார்.

சத்தியமங்கலம் நகர திமுக ஐடி விங் ட்விட்டர் பக்கத்தில், “திமுக தொண்டன் நினைச்சா நீ தெருவில் இறங்க முடியாது முருகா” என்று எல்.முருகனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு திமுக ஆதரவாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மு.க.ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது – பாஜக முருகன். இதென்ன ஐஐடிக்கு வந்த மோடின்னு நெனச்சிட்டீங்களா?… ஏதாவது பேசறதுக்கு முன்னாடி இதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகணுமில்லையா முருகன்ஜி..” என்று கிண்டல் செய்துள்ளார்.

பாஜக தலைவர் எல்.முருகன், மு.க.ஸ்டாலின் இனி வெளியே நடமாட முடியாது என்று எச்சரிக்கை விடுத்ததற்கு திமுகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். அவற்றில் சிலவற்றை மட்டும் வாசகர்களுக்கு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.