ராமநாதபுரம் அருகே கீழக்கரையைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பதற்காக தண்ணீரில் மிதக்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத் தெருவைச் சேர்ந்த இரட்டையர்கள் நசுருதீன், அசாருதீன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக பணியாற்றி வருகின்றனர். பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றும் வகையில் தண்ணீரில் மிதக்கும் சைக்கிளை தயாரித்துள்ளனர்.
இதற்காக 12 தண்ணீர் கேன்கள், இரும்பு கம்பிகள், சைக்கிள் சக்கரங்கள், இயந்திரப்படகுகளில் இருப்பது போன்ற புரோப்பல்லர் கொண்டு சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம், தண்ணீரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.
இதில் 180 கிலோ எடை வரை கொண்டு செல்லலாம். இந்த மிதவை சைக்கிள் 10 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். கடல் மற்றும் குளங்களில் மூழ்குபவர்களை மீட்கும் பணிக்கு இந்த சைக்கிள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.