இலங்கையில் சிறுபான்மை தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வுக்கு வற்புறுத்துவதன் மூலம் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை என்று இலங்கை அமைச்சர் சரத் வீரசேகரா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வுக்கு வற்புறுத்துவதன் மூலம் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை என்று இலங்கை அமைச்சர் சரத் வீரசேகரா விமர்சனம் செய்துள்ளார். ஏனெனில், இலங்கையின் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களை ஆயுதத்தைக் கைவிடச் செய்வதற்கும் இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் புது டெல்லி 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், தனது கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று கூறினார்.
தமிழ் சிறுபான்மை பிராந்தியங்களுடன் அதிகாரப் பகிர்வுக்கான அரசியலமைப்பு விதிகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடந்த மாதம் கோரிக்கை வைத்தார். அதற்கு இலங்கை அளித்த எதிவினையாக மாகாண சபை அமைச்சர் சரத் வீரசேகர கருத்துக்கள் பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி, செப்டம்பர் 27ம் தேதி இலங்கை பிரதமர் ராஜபக்சவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில், “இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று கேட்டதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தோ-இலங்கை உடன்படிக்கை என்பது மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் விளைவாக, பரவலாக்கப்பட்ட அதிகாரத்துடன் மாகாண சபைகளை உருவாக்கியது. இலங்கை அமைச்சர் வீரசேகர மாகாண சபைகள் அமைச்சராக உள்ளார்.
இந்தியா ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்திற்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்ததை விமர்சிக்க வேண்டாம் என்று ராஜபக்சே கடந்த ஆண்டு நிலைப்பாடு எடுத்ததாக வீரசேகரா கூறினார். ஏனென்றால், அது ஒரு நாட்டின் உள் விவாகாரம் என்பதால் அப்படி முடிவெடுத்தார். இலங்கையுடனான முந்தைய ஒப்பந்தத்தில் இந்தியா ஒரு தரப்பு என்பதால் மோடி தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என்று வீரசேகரா கூறினார்.
“இந்திய – இலங்கை ஒப்பந்தம் குறித்து எனக்கு தனிப்பட்ட கருத்துகள் உண்டு … அந்த ஒப்பந்தத்தில் இந்தியா தனது பங்கை மதித்ததா?” என்று வீரசேகரா கேள்வி எழுப்பினார். ஆயுதங்களைக் கைவிடுவதை உறுதி செய்ய இந்தியா தவறிவிட்டது. விரோதங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துதல் ஆகியவற்றை செய்ய இந்தியா தவறிவிட்டது” எனவே ஒப்பந்தம் குறித்த கவலை உள்ளது. அது செல்லாது என்றால் எங்கள் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்று வீரசேகரா கூறினார்.
இலங்கையில் அரசப் படைகளுக்கும் சிறுபான்மை இன தமிழ் போராளிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர 1987ல் இந்தியா தலையிட்டது. இலங்கை தமிழர்கள் தென்னிந்தியாவில் தமிழர்களுடன் குடும்ப, மொழியியல் மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளனர். மேலும், அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ள மோதல் தனது எல்லைக்குள் அமைதியின்மையை உருவாக்ககூடாது என்பதில் இந்தியா ஆர்வமாக இருந்தது.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது. ஆனால், அது நாடு திரும்புவதற்கு முன்பு, பெரும் இழப்புகளுடன் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை 1991ல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
ஐ.நா.வின் கூற்றுப்படி, இலங்கை அரசப் படைகள் 2009ல் கிளர்ச்சியாளர்களை நசுக்கியது. 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தபோது குறைந்தபட்சம் 1,00,000 மக்களைக் கொன்றது. அமைதியை உறுதி செய்வதற்காக தமிழர்களுடன் அதிக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதாக அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உறுதியளித்துள்ளன. ஆனால், கடந்த நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த யோசனையை நிராகரித்தார்.





