ஞாயிறு, 25 அக்டோபர், 2020

குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி தேசிய விரோதா அமைப்பா? பாரூக் அப்துல்லா

 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி (பிஏஜிடி) பாஜக கட்சிக்கான எதிர்ப்பு தளமாக அமையும் என்றும், தேச விரோத செயல்பாடுகளை முன்னெடுக்காது என்றும்  தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா தெரிவித்தார்.

மக்கள் கூட்டணியின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரூக், “ இந்த கூட்டணி தேச விரோதமான அமைப்பு  என்ற பாஜகவின் பொய் பிரச்சாரத்தில் சிறிதும் உண்மையில்லை என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். இந்த கூட்டணி பாஜகவின் சிந்தாந்தங்களுக்கு எதிரானது என்பதில் சந்தேகம் இல்லை ” என்று தெரிவித்தார்.

அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியதன மூலம் கூட்டாட்சி கட்டமைப்பை பாஜக உடைத்ததாகவும் முன்னாள் முதல்வர் கூறினார்.

“நாட்டின் அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கின்றனர்.  சமுதாயத்தைப் பிளவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இந்திய  கூட்டாட்சி கட்டமைப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது … இந்த மக்கள் கூட்டணி ஜமாஅத் தேசிய விரோத அமைப்பு இல்லை  என்று நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.  ஜம்மு காஷ்மீர், மற்றும் லடாக் மக்கள் தங்கள் உரிமைகளை திரும்பப் பெற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.  ” என்று அவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சிபிஎம் தலைவர் முகமது யூசுப் தரிகாமி கூட்டணியின் கன்வீனராக நியமிக்கப்பட்டார். மேலும், மக்கள் மாநாட்டின் சஜாத் லோன் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த வெள்ளை அறிக்கையை அடுத்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று செய்தியாளர்களிடம் லோன் கூறினார்.

“வெள்ளை அறிக்கை அரசியல் தத்துவ ரீதியாக   இருக்காது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாட்டு மக்களுக்கு யதார்த்த நிலைமைகளை கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

குப்கர்  பிரகடனம் என்பது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி, தேசிய மாநாட்டு கட்சி தலைவரின் குப்கர் இல்லத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட தீர்மானமாகும். ஜம்மு- காஷ்மீரின் அடையாளம், சுயாட்சி, சிறப்பு அந்தஸ்து ஆகியவற்றை  பாதுகாப்பது இப்பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.