அதிமுகவில் தலைவர்களே நாடகமாடுகிறார்கள் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கடுமையாக விமர்சனம் செய்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியா, அல்லது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமா என்ற கேள்வி இருந்துவந்தது. இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அண்மையில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டாக இணைந்து அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தனர். இதனால், அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்-க்கு இடையே இருந்த புகைச்சல் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்பட்டது.
அதே நேரத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா ஆடுத்த ஆண்டு விடுதலையாகி வெளியே வந்தால், அதிமுகவில் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் கனிசமானோர் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவித்தாகிவிட்டது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே இருந்த புகைச்சல் முடிவுக்கு வந்துவிட்டது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவரால் முன்புபோல அதிமுகவில் செல்வாக்கு செலுத்த முடியாது. அதிமுக உறுதியாக இருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் எல்லோரும் தங்கள் தொகுதிகளில் இப்போதே தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டர்கள். அதிமுக நம்பிக்கையுடன் செயல்படுகிறது என்று பேசவைத்துள்ளார்கள்.
இந்த நிலையில்தான், இதெல்லாம் வெறும் தோற்றம் அதிமுகவில் பல தலைவர்கள் நாடகமாடுகிறார்கள் என்று ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் விஷயத்தை பொதுவில் போட்டு உடைத்துள்ளார்.
மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் பல ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். இவர் தற்போது அதிமுகவில் யாருடைய ஆதரவாளர் என்று வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அதிமுகவின் நலனில் அக்கறையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
பூங்குன்றன் தனது ஃபேஸ் புக் பக்கத்தில், ‘யார் மனசுல யாரு’ என்று தலைப்பிட்டு, அதிமுகவில், பல தலைவர்கள் முதல்வர் பழனிசாமியிடமும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடமும் டிடிவி தினகரனிடமும் (சசிகலா ஆதரவாளரிடமும்) நாடகமாடுகிறார்கள். இதுதான் உண்மை நிலை என்று விமர்சனங்களை வைத்துள்ளார்.
பூங்குன்றன் தனது ஃபேஸ் புக்கத்தில் கூறியிருப்பதாவது, “ ‘யார் மனசுல யாரு’
தொண்டர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவருடன் பயணிக்கிறார்கள். பக்தர்கள் ‘இரட்டை இலை’ இருக்கும் இடத்தில் பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சரி, தலைவர்கள் யாருடன் பயணிக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க மனம் ஆசைப்பட்டது. ஆராய்ந்து பார்த்தேன். அலசிப் பார்த்தேன். பேசிப் பார்த்தேன். கடைசிவரை ‘யார் மனசுல யாரு’ என்ற வார்த்தைக்கு விடை காண முடியவில்லை…
நான் புரிந்து கொண்டதை உங்களுக்கு சொல்கிறேன். நான் சொல்வது சரியா? தவறா? என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். கட்சிக்கார நண்பர் என்னிடம் சொன்னார் கழகத்தின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது. முதலமைச்சர் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இனி நிலைமை எப்படி இருக்கும் என்று கேட்டார். காலம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், எனக்கு தெரிந்தவரை யார் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைதான் கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்றேன். சிலர் கட்சி மாறுவதற்குக் கூட தயாராக இருக்கிறார்கள். இன்றைக்கு யார் வெற்றி பெறுவார்கள் என்று அவர்களால் கணிக்க முடியாததுதான் மாறாமல் இருப்பதற்கான காரணம். ஏன்? அப்படி நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.
முதலமைச்சரிடம் செல்கிறார்கள். உங்களை முதல்வராக மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். இனி உங்களுக்கே வெற்றி என்று ஆர்ப்பரிக்கிறார்கள். அவர்களே ஒருங்கிணைப்பாளருக்கு வேண்டியவர்களிடம் அம்மா தேர்ந்தெடுத்தது ஐயாவைத் தான். அவர் விட்டுக் கொடுத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்கிறார்கள். அவர்களே சின்னம்மாவிற்கு நெருங்கியவர்களிடம் சின்னம்மா எப்போது வருகிறார்கள். அவர்கள் வந்தால்தான் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்றும் சொல்கிறார்கள். இப்படித்தான் தலைவர்களின் மனநிலை இருக்கிறது. பலருடன் பேசியதில் இருந்து நான் தெரிந்து கொண்டது இது என்றேன். கேட்டுக்கொண்டிருந்த நண்பரும் சிரித்துவிட்டு, சரியாகச் சொன்னீர்கள். இதுதான் இன்றைக்கு நடக்கிறது. நான் பலரிடம் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டதும் இதுதான் என்றார். உடனே, நான் நண்பரிடம் எல்லோரிடமும் பார்த்து பேசுங்கள் என்று அறிவுரைச் சொன்னேன். நண்பரும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். நண்பரிடம் சொன்னவையே தொண்டர்களுக்கான அறிவுரை. பேருந்தில் துண்டு போடுவதைப் பார்த்திருப்பீர்கள் அதுபோல பல இடங்களில் துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள். ஜாக்கிரதை!
இவர்களெல்லாம் ஜெயிக்கும் இடத்திற்குச் சென்று விடுவார்கள். உயர்ந்தும் விடுவார்கள். இவர்களை நம்பிச் சண்டை போட்டுக்கொள்ளும் தொண்டர்களின் நிலைதான் பரிதாபம். ‘ஆடு கசாப்புக் கடைக்காரனை தான் நம்பும் என்று சொல்வார்களே! அது போல நடிப்பவர்களை தான் தலைவர்களும் நம்புவார்கள். நம்பியவர்கள் ஏமாற்றும் போது, ஏமாந்த பின்பு தான் நல்லவர்களை நம்பத் தொடங்குவார்கள். அதற்குள் காலம் நம்மைவிட்டு போய்விடும்.
கழகத்தை கையில் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் தலைவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். கழகத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்காதீர்கள். காப்பாற்ற வேண்டும் என்று நினையுங்கள். அதுவே உங்களுக்கான வெற்றியைத் தேடித்தரும். நல்லவர்களை நம்புங்கள். துதிபாடுபவர்களை கூட வைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களுக்கு துதிபாடவில்லை மாறாக குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. உங்களிடம் எதிர்பார்ப்பில்லாத பொதுவானவர்களிடம், அரசியலில் பயணிக்காத நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களே உங்களுக்கான நல்லதைச் சொல்வார்கள்.
‘யார் மனசுல யார்’ என்பதை காலம் தான் நிர்ணயிக்க போகிறது. நீங்களோ, நானோ இல்லை. ஆனால், தொண்டர்களின் மனதில் அம்மாவும், கழகமும் நிறைந்திருக்கிறார். நிறைந்திருக்கிறது. புரட்சித்தலைவருடைய பொற்கால ஆட்சி அமைப்பதே அவர்களுடைய லட்சியம். எதையும் எதிர்பார்க்காத தொண்டனே இந்த கழகம் என்ற விருட்சத்திறகு ஆணிவேர். ஆணிவேருக்கு யார் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்? யார் வெந்நீர் பாய்ச்சுகிறார்கள் என்பது போகப் போகத் தெரியும். ‘கழகம் எங்கள் இதயம்’ என்று நினைக்கும் தொண்டர்களில் ஒருவனாக நான் பயணிக்க ஆசைப்படுகிறேன். வாருங்கள் கழகம் என்ற எஃகு கோட்டையினுடைய பலம் குறைவான பகுதிகளை சரி செய்வோம்.
நினைப்பவை நல்லவையாக இருந்தால், நடப்பவையும் நல்லவையாக இருக்கும். வாழ்க வளமுடன்!” இவ்வாறு பூங்குன்றன் அதிமுகவில் பல தலைவர்கள் இ.பி.எஸ், ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் ஆகியோரிடையே நாடகமாடுவதை ஒரு பதிவில் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
பூங்குன்றனின் பதிவைப் பார்த்த பல அதிமுக தொண்டர்கள், பொது அரசியல் பார்வையாளர்கள், அதிமுகவில் இன்னும் புகைச்சல்கள், சலசலப்புகள் ஓயவில்லையா என்று கேட்கத்தொடங்கியுள்ளனர்.