ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் படுகொலை சம்பவத்தைக் குறிப்பிட்டு, பாஜக சார்பில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது அவதூறு செய்யும் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு சார்பில் போலீஸில் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் இளம் பெண் ஆதிக்க சாதியைச் சேர்ந்த 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. செப்டம்பர் 29ம் தேதி மருத்துவமனையில் இருந்து நள்ளிரவு அந்த பெண்ணின் உடலை கிராமத்துக்கு கொண்டுவந்த உ.பி. காவல்துறை, பெற்றோர் பெண்ணின் உடலை கடைசியாக வீட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என கூறியதைப் பொருட்படுத்தாமல் போலீஸார் வலுக்கட்டாயமாக நள்ளிரவில் உடலை தகனம் செய்ததாக அந்த பெண்ணின் குடும்பதினர் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்றபோது, அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன் பிறகு, அவர் மீண்டும் ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார். பின்னர், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேச அரசு ஹத்ராஸ் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குமரி மாவட்டத்தில், பாஜக சார்பில், உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹத்ராஸில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களால் படுகொலை செய்யப்பட்ட தலித் இளம் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி என்று காங்கிரஸ் கட்சியையும் கம்யூனிஸ்ட்களையும் அவதூறு செய்யும் வகையில் போஸ்டர் ஓட்டப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜே.அஸ்லம் பாஷா, பாஜக சார்பில், மார்தாண்டத்தைச் சேர்ந்த உமேஷ் என்பவர் இந்த அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டியதாக காவல்துறையில் புகார் அளித்துள்லார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜே.அஸ்லம் பாஷா, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளித்துள்ள புகாரில், மார்தாண்டத்தைச் சேர்ந்த உமேஷ் என்பவர், பாஜக சார்பில் ஹத்ராஸ் பெண்ணை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் படுகொலை செய்ததாக கண்ணீர் அஞ்சலி என்று அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
அஸ்லம் பாஷாவின் புகாரில், உமேஷ் என்பவரின் ஃபேஸ்புக் பக்கம், அவர் பாஜகவில் உள்ளார் என்பதைக் காட்டுகிறது. மேலும், புகாரில், உமேஷ், ராஜ் லித்தோ பிரஸ் புரோமோட்டர்ஸ் என்றும் வேலங்கோடு கிராம பஞ்சாயத்து தலைவர் சி.தர்மராஜ் மற்றும் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவின் மாவட்ட நிர்வாகிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ள இந்த போஸ்டர்களின் புகைப்படங்கள் மற்றும் கன்னியாகுமரி மற்றும் அண்டை மாவட்டங்கள் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த குற்றத்தைச் செய்ய பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் சமூக ஊடக கணக்குகளும் முடக்கப்பட வேண்டும் என்று அஸ்லம் பாஷா புகார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜே.அஸ்லம் பாஷா, இந்த புகாரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், டி.ஐஜி, திருநெல்வேலி ரேஞ்ச், ஐஜி, தென் மண்டல டிஜிபி, தமிழ்நாடு மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். அதில், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.
அதே நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சியினர் ஹத்ராஸ் அவதூறு போஸ்டர்கள் ஓட்டியவர்களுக்கு சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.