இந்தியாவில் 18 வயதிற்க்கு மேற்பட்ட அனைவருக்குமான தடுப்பூசி திட்டம் மே 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்த 3ஆம் கட்ட தடுப்பூசி திட்டம் தொடங்க உள்ள நிலையில் சில மாநிலங்கள் மட்டுமே திறந்த வெளிச் சந்தை மூலம் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒருங்கிணைந்துள்ளன என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் இது பற்றிய எந்த விவரங்களையும் வழங்கவில்லை.
இருப்பினும், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளில் சில, அவர்களிடம் குறைந்த அளவு தடுப்பூசி கையிருப்பில் இருந்தாலும் கூட இந்த தடுப்பூசி திட்டத்தில் இணைந்துள்ளன.
அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் ஆகியவை சில தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளைத் வழங்குவதாகக் கூறியுள்ளன. தற்போது இந்தியாவில் கிடைக்கின்ற இரண்டு தடுப்பூசிகளான கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் சில அளவுகளை இந்த மருத்துவமனைகள் கொள்முதல் செய்துள்ளன. எனவே தடுப்பூசி திட்டத்தில் இணைவதாக கூறியுள்ளன.
இந்த மருத்துவமனைகள் கோவாக்சினின் ஒரு டோஸிற்கு 1,200-1,250 ரூபாயும், கோவிஷீல்டின் ஒரு டோஸிற்கு 800-850 ரூபாயும், நிர்வாக செலவு மற்றும் ஜிஎஸ்டி உட்பட விலை நிர்ணயம் செய்யவுள்ளன.
தடுப்பூசி செலுத்த விரும்புவோர் அரசாங்கத்தின் கோ-வின் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த மருத்துவமனைகளில் அனைத்தும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் வழங்க வாய்ப்பில்லை.
ஆனால், மத்திய அரசு பதினொரு நாட்களுக்கு முன்பு, மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல், தடுப்பூசி அளவுகள் இருப்பு குறித்து எந்த தெளிவும் இல்லாமல், மே 1 முதல் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதாக ஒருதலைப்பட்சமாக அறிவித்தது.
தடுப்பூசி கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இந்த சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதன்படி 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய முன்னுரிமை குழுவில் உள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசி போட, தனியார் மருத்துவமனைகள் திறந்த சந்தையிலிருந்து நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனை குழுமமான அப்பல்லோ மருத்துவமனை, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற இடங்களில் உள்ள அதன் மருத்துவமனைகளில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள கிளினிக்குகள் மூலமும் தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஷோபனா காமினேனி தெரிவித்துள்ளார். மேலும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் இன்னும் இரண்டாவது டோஸை பெறாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
” மானிய விலையில் (ஒரு டோஸுக்கு ரூ. 150) அரசாங்கம் எங்களுக்கு வழங்கியவற்றின் பங்குகளை நாங்கள் திருப்பித் தர வேண்டியிருந்தது, ஆனால் முதல் டோஸ் எடுத்தவர்கள், இரண்டாவது டோஸ்க்காக காத்திருக்கிறார்கள். நாங்கள் அவர்களை ஆபத்தில் வைக்க முடியாது, அதனால்தான், இவற்றிற்கு பணம் செலுத்த அவர்கள் தயாராக இருந்தால், எங்கள் தற்போதைய பங்குகளிலிருந்து அவர்களின் இரண்டாவது டோஸிற்கு முன்னுரிமை வழங்க நாங்கள் முடிவு எடுத்துள்ளோம், ”என்று காமினேனி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
நவம்பர் மாதத்தில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தயாரிக்கும் சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் ஆகியோருடன் அப்பல்லோ நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், மே 1 முதல் வட இந்தியா முழுவதும் உள்ள அதன் தடுப்பூசி மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டும் வழங்க உள்ளது.
கோவிஷீல்ட்டை கொள்முதல் செய்துள்ள மேக்ஸ் ஹெல்த்கேர், டெல்லி மண்டலத்தில் உள்ள அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அந்த தடுப்பூசிகளை வழங்கவுள்ளது. பஞ்சீல் பார்க், பட்பர்கஞ்ச், ஷாலிமார் பாக், ராஜீந்தர் பிளேஸ் (பி.எல்.கே-மேக்ஸ் மருத்துவமனை), நொய்டா, மற்றும் வைசாலி ஆகிய இடங்களில் இந்த தடுப்பூசிகள் கிடைக்கும்.
மேக்ஸ் ஹெல்த்கேர் உள்ளூர் சமூகங்கள், கார்ப்பரேட்டுகள் மற்றும் குடியுரிமை நலச் சங்கங்கள் (ஆர்.டபிள்யூ.ஏ) ஆகியவற்றில் தடுப்பூசி மையங்களை “விரைவில்” உருவாக்க திட்டமிட்டுள்ளது என்று அதன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் அபய் சோய் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் அதிக அளவில் கிடைக்கும்போது, இந்த மூன்று மருத்துவமனை குழுமங்களும், நாடு முழுவதும் உள்ள தங்களது மற்ற மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளன.
பெரிய மருத்துவ குழுமங்களின் அறிவிப்புகள் இருந்தபோதிலும், பல தனியார் தடுப்பூசி மையங்களில் சனிக்கிழமையிலிருந்து தடுப்பூசிகள் வழங்க வாய்ப்பில்லை – ஏனெனில், உண்மையில், பல மாதங்களுக்கு ஆர்டர்கள் தாமதமாகும் என்று பலரும் உற்பத்தியாளர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், திறந்த சந்தையில் இருந்து தடுப்பூசிகளை வாங்கக்கூடிய தனியார் மருத்துவமனைகள் மட்டுமே தொடர்ந்து தடுப்பூசி போட முடியும் என்பதையும், முன்னுரிமை குழுக்களுக்கு வழங்குவதற்காக, இருக்கும் தடுப்பூசி அளவுகளை அரசாங்க தடுப்பூசி திட்டத்திற்கு திருப்பித் தர வேண்டும் என்பதையும் மத்திய அரசு கோடிட்டுக் காட்டியுள்ளது.
தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், ஏற்கனவே முதல் அளவைப் பெற்ற ஏராளமான பயனாளிகள், தனியார் தடுப்பூசி தளங்களில் இரண்டாவது அளவை தற்போது பெற முடியாது என்பதை இது திறம்பட அர்த்தப்படுத்துகிறது.
“நாங்கள் ஏற்கனவே மாநிலங்களுடன் விவாதித்துள்ளோம், தனியார் தடுப்பூசி மையங்களுக்கு வழங்கப்படும் அனைத்து இலவச அளவுகளும் கணக்கிடப்பட வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்டியுள்ளோம்; அதே நேரத்தில், இந்த கூடுதல் அளவுகளை எடுத்துக் கொண்டு அவர்கள் மாநில அரசின் தடுப்பூசி மையங்களை இயக்க வேண்டும் என்று ஒரு தெளிவான வழிகாட்டுதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது ”என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
“வழிகாட்டுதல்களின்படி, தனியார் மையங்கள் திறந்த சந்தையிலிருந்து 50 சதவீதத்தை கொள்முதல் செய்து, அவர்களின் தடுப்பூசி தளங்களை இயக்க முடியும் என்றும், சரிபார்ப்புக்கு உட்பட்டு, எனக்குச் சொல்லப்பட்டபடி, இதுதான் உண்மை நிலவரம்; இதில் மாறுபாடுகள் இருந்தால், நாங்கள் உங்களிடம் தகவல் தெரிவிப்போம், ”என்றும் அகர்வால் கூறியுள்ளார்.
18-44 குழுவிற்கு எத்தனை மாநிலங்கள் தடுப்பூசிகளைத் தொடங்க முடியும் என்று கேட்டதற்கு, மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெளிவான பதிலை அளிக்கவில்லை.
“ஜனவரி 16 அன்று, தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டபோது வரையறுக்கப்பட்ட மையங்கள் இருந்தன; மெதுவாக அவை அதிகரித்தன. அதேபோல், இந்த தடுப்பூசி இயக்கமும் தனியார் துறை, மாநிலங்கள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் ஒருங்கிணைந்து மெதுவாக உறுதிப்படுத்தப்படும்… மாநிலங்கள் உற்பத்தியாளர்களுடன் ஒருங்கிணைந்து வருகின்றன, சில மாநிலங்களில் 3ஆம் கட்டம் தொடங்கப்படும். எந்தவொரு புதிய செயல்முறையும் உறுதிப்படுத்தவும் வளரவும் நேரம் எடுக்கும், ”என்று அகர்வால் கூறியுள்ளார்.
மூன்றாம் கட்டத்திற்கு மத்திய அரசு “தேவையான ஆதரவை அளிக்கிறது” என்றும் அகர்வால் வலியுறுத்தியுள்ளார்.
“… ஏற்கனவே மாநிலங்கள் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் ஒருங்கிணைந்துள்ளன. இந்திய அரசும் அவர்களுக்கு தேவையான ஆதரவை அளித்து வருகிறது. நேற்று, நாங்கள் அனைத்து மாநிலங்களுடனும் ஒரு விரிவான மாநாட்டை வீடியோ கான்ப்ரஸ் மூலம் நடத்தினோம்… மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் மாநிலங்களை நாங்கள் கையாளும் விதத்தின்படி, இந்த தடுப்பூசி இயக்கம் நாங்கள் அதை வடிவமைத்தப்படி தொடங்கும் என நாங்கள் நினைக்கிறோம்…, ”என்று அவர் கூறினார் .
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தனது அமைச்சர்கள் சபையை சந்தித்து இரண்டாவது அலையிலிருந்து எழும் நிலைமை குறித்து விவாதித்தார். “தற்போதைய தொற்றுநோய் நெருக்கடி “நூற்றாண்டுகளில் ஒரு நெருக்கடி “என்றும் இது உலகிற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது என்றும் அமைச்சர்கள் கவுன்சில் கூட்டம் குறிப்பிட்டது,” என்று PMO அறிக்கையில் மூலம் கூறப்பட்டுள்ளது.
“பிரதமர் நரேந்திர மோடி, அரசாங்கத்தின் அனைத்து பிரிவுகளும் நிலைமையை சமாளிக்க ஒற்றுமையாகவும் விரைவாகவும் செயல்படுகின்றன என்று கூறினார். அமைச்சர்கள் அந்தந்த பிராந்திய மக்களுடன் தொடர்பில் இருக்கவும், அவர்களுக்கு உதவவும், அவர்களின் கருத்துக்களைப் பெறவும் அவர் கேட்டுக்கொண்டார். உள்ளூர் மட்டத்தில் உள்ள பிரச்சினைகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு தீர்வு காணப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார், ”என்றும் PMO அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/18-above-covid-vaccine-supply-shortage-298343/