நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் உச்சத்தில் உள்ளது. அதிகமான கொரோனா நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதால் ஆக்சிஐன் தேவை அதிகமாகிறது. இதனால் ஆக்ஸிஜன் செறிவூட்டலை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
வீடுகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மூச்சுத் திணறலை சமாளிக்க உடனடியாக மருத்துவமனையை நாடுவது, ஆக்சிஜன் சப்ளை பெறுவதை விட நோயாளிகள் ‘புரோனிங்’ செய்யலாம் என ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நுரையீரல் இயக்குநர் டாக்டர் விவேக் ஆனந்த் படேகல் கூறுகிறார்
புரோனிங்
ரத்த ஆக்ஸிஜன் அளவை நிர்வகிக்க புரோனிங் செய்யலாம். புரோன் பொசிஷன் என்பது குறிப்பிட்ட நேரம் குப்புறபடுப்பது, பின் வலதுபுறம் படுப்பது சிறிது நேரத்திற்கு பின் உட்கார்ந்து விட்டு இடது புறமாக படுப்பது இறுதியாக மீண்டும் குப்புறபடுப்பது. முகத்தை கீழே வைத்து, மார்பை உயர்த்தி, விரைவான சுவாசத்தை பயிற்சி செய்வதும் இதில் அடங்கும். இது ‘புரோன் வென்டிலேட்டர் முறை’ என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்துகிறது. இப்படி செய்வதால் சுவாச பிரச்சனையை சமாளிக்க முடியும் என மருத்துவர் ஆனந்த் கூறுகிறார். ஆக்சிஜன் செறிவு 94 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், ஒருவர் ‘புரோனிங்’ (Proning) முயற்சி செய்ய வேண்டும்.
புரோனிங் செய்யும்போது நினைவில் கொள்ள வேண்டியவை
உணவுக்குப் பிறகு ஒரு மணி நேரம் புரோனிங் செய்வதைத் தவிர்க்கவும்.
உங்கள் உடலில் அசௌகரியம் ஏற்பட்டால், உடனடியாக இந்த செயல்முறையை நிறுத்தவும்.
நோயாளிகள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் சுழற்சி முறையில் புரோனிங் செய்யலாம். உடலில் ஏதாவது காயங்கள் இருந்தால் எலும்பில் அடிபட்டு இருந்தால் இதனை செய்வது கடினம். மருத்துவரை கலந்து ஆலோசித்த பிறகு அல்லது மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் இதனை செய்யலாம். வீட்டு தனிமையில் உள்ள நோயாளிகளுக்கும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கும் அல்லது வெண்டிலேட்டரில் இருப்பவர்களுக்கும் கூட புரோனிங் பயனுள்ளதாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்த ஆக்ஸிஜன் அளவு: இயல்பானது எது குறைவானது எது?
ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு (SpO2) சராசரியாக 90 முதல் 100 வரை இருக்க வேண்டும். இது 90க்கு கீழ் குறைந்தால் ஆபத்தானது. உடனடியாக அந்த நபருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ஆக்ஸிஜன் அளவு வீழ்ச்சியடைவது hypoxemiaவுக்கு வழிவகுக்கும். ஆக்சிஜன் அளவு தொடர்ந்து குறைவாக இருக்கும்போது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் பாதிக்கப்பட்ட நபரின் உடல் உறுப்புகள் சேதமடையும் அல்லது உயிரிழப்பு ஏற்படும்.
கோவிட் வைரஸ் தொற்றால் உடலின் ஆக்சிஜன் சப்ளை கடுமையாக பாதிக்கப்படலாம். வைரஸ் நுரையீரல் மற்றும் மார்பு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலான நேரங்களில் நோயின் தீவிரத்தை வெளிப்படுத்தும் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.
மருத்துவ கண்காணிப்பின் முக்கியத்துவம்
கொரோனா நோயாளியின் ஆக்ஸிஜன் அளவை கண்காணிப்பது மிக முக்கியம். வீட்டிலேயே புரோனிங் அல்லது ஆக்சிஜன் சிகிச்சை செய்வதெல்லாம் தற்காலிக தீர்வே. நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவு தொடர்ந்து கணிசமாகக் குறைந்து வந்தால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
source https://tamil.indianexpress.com/lifestyle/proning-helps-improve-oxygen-levels-in-covid-19-patients-298385/