06.06.2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பது உறுதியான நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாஜக தலைவர் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு ஸ்டாலின் ட்விட்டரில் நன்றி தெரிவிக்கும் வகையில் பதிவுகளை இட்டார். அந்த பதிவுகளில், மத்திய அரசு என்பதற்கு பதிலாக, ‘ஒன்றிய அரசு’ என குறிப்பிட்டிருந்தார்.
அப்போது இருந்தே தமிழக அரசியல் களத்தில் ஒன்றிய அரசு எனும் வார்த்தை பேசு பொருளாக தொடங்கியது. அதன் பிறகாக, மத்திய அரசுக்கு மாநில அரசின் அனைத்து கடிதங்களிலும் ஒன்றிய அரசு என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பலரும் இதையே பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில், மாநில அரசுகளின் ஒன்றியம் தான் ஒன்றிய அரசு என்ற காரசார விவாதங்களும் சமூக வலைதளங்களில் உலாவி வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம் தான். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே ஒன்றிய அரசு என்பது சரியானதுதான் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். திமுக வின் ஒன்றிய அரசு ஃபார்முலா நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதிமுக தரப்பில் இருந்து கடும் விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக, அதிமுக வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழில் ‘சிரங்குகாரனுக்கு சொறிபவனே சொந்தக்காரன்’ எனும் தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்திய அரசு எனும் போது அதனை இந்தியாவின் ஒன்றிய அரசு என அமைப்பதில் தவறில்லை என்பதாக கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அப்படி என்றால், மாவட்டங்களின் ஒன்றியம் தான் மாநில அரசு. அப்படி என்றால், மாவட்டங்களின் ஒன்றியம் என்று மாநில அரசுகளை அழைக்க இயலுமா என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியோடு பல ஆண்டு காலமாக கூட்டணி அமைத்து, மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்த போது, மத்திய அரசை அழைக்காமல், இப்போது அவ்வாறு அழைப்பதற்கு ஆர்வம் காட்டுவது பிரிவிணையை ஏற்படுத்துவதற்காக தான் என்பதை புரிந்துக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.
திமுக வின் ‘ஒன்றிய அரசு’ ஃபார்முலாவுக்கு மெளனம் காத்து வந்த அதிமுக, தனது அதிகாரப்பூர்வ செய்தி நாளேட்டில் பதிலடி அளித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-union-government-terms-admk-dmk-controversy-namathu-amma-311118/