25 12 2021 ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 183 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 10இல் 9 பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தரவு முடிவுகளை பார்க்கையில், ஒமிக்ரான் தொற்றை தடுப்பூசியால் மட்டும் தடுத்திட முடியாது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவை தான் ஒமிக்ரானை சமூக பரவலாக மாற்றாமல் தடுத்திடும் என கூறப்படுகிறது.
ஆய்வு முடிவுகளை வெளியிட்ட சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், “ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 27 சதிவிகதம் நபர்கள் எவ்வித வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொள்ளவில்லை. இது சமூகத்தில் ஒமிக்ரான் இருப்பதைக் குறிக்கிறது.
87 நபர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். மூன்று பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர். இரண்டு பேர் முதல் தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். ஒமிக்ரான் தாக்கிய 183 பேரில் எழு பேர் மட்டுமே தடுப்பூசி போடவில்லை.
இந்தியாவின் கோவிட்-19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் வி கே பால் கூறுகையில், “டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரான் வீடுகளுக்குள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். வெளியிலிருந்து தொற்றை வீட்டிற்கு கொண்டு வரும் நபர், வெளியே முகக்கவசம் அணியாததால், வீட்டில் பரவுவதற்கு காரணமாக அமைகிறார். ஒமிக்ரானில் ஆபத்து அதிகம். தயவுசெய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மாஸ்க் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுதல், கூட்டமான இடத்தை தவிர்ப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். நம்மிடம் தடுப்பூசி உள்ளது. ஆனால், அதனால் மட்டுமே தொற்றை கட்டுப்படுத்திட இயலாது” என்றார்.
ஐசிஎம்ஆர் டிஜி டாக்டர் பல்ராம் பார்கவா கூறுகையில், ” ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் 70 பேர் அறிகுறியற்றவர்கள். ஒமிக்ரான் இருந்தாலும், புதிய பாதிப்புகளை சோதனை செய்ததில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துவது டெல்டா தான். எனவே, முன்பு போலவே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்த வேண்டும்” என்றார்.
மேலும் பேசிய பால், ” ஒமிக்ரான் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், தனியார் மருத்துவமனைகள் வார்டுகளை தயார் நிலையில் வைக்கவேண்டும்.
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். படுக்கைகள் எண்ணிக்கை, ஆக்சிஜன் சப்போர்ட போன்றவை போதுமான அளவில் இருக்கிறா என்பதை கண்காணிக்க வேண்டும்” என்றார்.
பூஷன் வெளியிட்ட அறிக்கையில், ” நாட்டில் 18.1 லட்சம் படுக்கைகள், 4.94 லட்சம் ஆக்சிஜன் சப்போர்ட் படுக்கை, 1.39 லட்சம் ஐசியூ படுக்கை, 23,057 குழந்தைகளுக்கான ஐசியூ படுக்கை, 64,796 குழந்தைகளுக்கான ICU அல்லாத படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
பூஸ்டர் டோஸ் குறித்து பார்கவா பேசுகையில், ” அது தொடர்பான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. . கோவிட்-19 பணிக்குழு இது குறித்து பலமுறை விவாதித்துள்ளது.
குறிப்பிட்ட தடுப்பூசி மற்றும் இரண்டாம் தடுப்பூசியின் போது T-cell response,antibody response தொடர்பான உலகம் முழுவதிலுமிருந்து மற்றும் இந்தியாவின் அனைத்து தரவுகளையும் மதிப்பாய்வு செய்து வருகிறோம். தொற்றுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதை ஆராயுகிறோம் என்றார்.
மத்திய சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டில் 358 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.114 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா – 88 , டெல்லி – 67, தெலங்கானா -38, தமிழ்நாடு -34, கர்நாடகா- 31, குஜராத் -30 ஆகிய 6 மாநிலங்களில் தான் ஒமிக்ரான் பாதிப்பு அதிகளவில் தென்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/india/centre-warns-9-of-10-affected-by-omicron-jabbed-with-both-doses/