வியாழன், 23 டிசம்பர், 2021

வரலாற்றில் மற்ற வைரஸ்களை காட்டிலும் ஒமிக்ரான் வேகமாக பரவுகிறது

 21 12 2021 உலகம் முழுவதும் 106 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் தீவிரத்தன்மையை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் பல தரப்பு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், ஒமிக்ரான் தொற்று காரணமாக பெருந்தொற்றின் மோசமான கட்டத்திற்கு நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்த அவர், “வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தோன்றியபோது, நாம் தொற்றுநோயின் மோசமான பகுதிக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரான் நம் அனைவரின் வீட்டிற்கு வரும். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் வீட்டிலும் ஒமிக்ரான் வந்துள்ளது. இதனால் எனது விடுமுறை பிளேன்களை ரத்து செய்துவிட்டேன்.

வரலாற்றில் மற்ற வைரஸ்களை காட்டிலும் ஒமிக்ரான் வேகமாக பரவிவருகிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இது கூடிய விரைவில் பரவிவிடும். ஓமிக்ரான் உங்களை எப்படி நோய்வாய்ப்படுத்துகிறது என்பது குறித்து தெரியவில்லை.இது டெல்டாவை விட பாதியாக இருந்தாலும், இதுவரை நாம் பார்த்த மிக மோசமான பாதிப்பாக இது இருக்கும், ஏனெனில் இது மிகவும் வேகமாக தொற்றும் தன்மை கொண்டது.

தடுப்பூசிகள் மக்கள் தீவிரமாக நோய்வாய்ப்படுவதையோ அல்லது இறப்பதையோ தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைச் சிறப்பாகச் செய்கிறது.

இங்கே ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஒமிக்ரான் மிக விரைவாக கடந்து செல்லும் என்பது தான். ஒரு நாட்டில் ஒமிக்ரான் தென்பட்டாலும், மூன்று மாதத்திற்கும் மேலாக அதன் அலை நீடிக்காது.அந்த சில மாதங்கள் மோசமாக இருக்கலாம், ஆனால் நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், தொற்றுநோய் 2022 இல் முடிவுக்கு வரும் என்று நான் இன்னும் நம்புகிறேன்.

கொரோனா அச்சத்துடன் மற்றொரு விடுமுறைக்கு செல்வது வெறுப்பான விஷயம் என்பதை அறிவேன். என்றைக்கும் இப்படி இருக்காது. எப்போதாவது தொற்றுநோய் முடிவுக்கு வரும். நாம் ஒருவரையொருவர் பார்த்து கொள்வோம். அந்த நேரம் விரைவில் வரும்” என தெரிவித்தார்.

source : https://tamil.indianexpress.com/international/omicron-spreading-faster-than-any-virus-in-history-warns-bill-gates-386632/