திங்கள், 20 டிசம்பர், 2021

தமிழக அரசு விருந்தினராக வருகை: ஜனவரி 12-ல் ஒரே மேடையில் பிரதமர் - ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12 ஆம் தேதி, புதிதாக கட்டப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக தமிழகம் வருகிறார். விருதுநகரில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியாவும் கலந்துகொள்கிறார்.

தமிழ்நாட்டில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, முதன்முறையாக மோடி தமிழகம் வருகிறார். இந்த கல்லூரிகள் திறக்கப்பட்டதும் சுமார் 1450 இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், பிரதமர் மோடியின் திட்டங்கள் வாயிலாக மருத்துவ கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளும், நிதியுதவி பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு கல்லூரி கட்டுவதற்கான 325 கோடி ரூபாய் செலவை மத்திய அரசும், மாநில அரசும் பகிர்ந்து கொண்டன.

அரியலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், கள்ளக்குறிச்சி, ஊட்டியில் தொடங்கப்படவுள்ள கல்லூரிகளில் 150 இடங்களும், நாமக்கல், திருவள்ளூர், திருப்பூர், ராமநாதபுரம் கல்லூரிகளும் 100 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர கடலூர், காஞ்சிபுரத்திலும் கல்லூரிகள் தொடங்கிட முந்தைய அதிமுக அரசு முன்மொழிந்தது. ஆனால், சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம், காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி இருப்பதால், அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

இதுகுறித்து பேசிய முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “இந்த திட்டத்தை போர்கால அடிப்படையில் முன்னெடுத்து நிலம் கையகப்படுத்தும் பணியை முடித்து, அரசு நிறுவனங்களிடம் இருந்து விரைவில் அனுமதி பெற முடிந்தது. ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி தமிழ்நாட்டிற்கு கிடைத்தது வரலாற்று சிறப்பிமிக்கது” என்றார்.

மேலும், நாகப்பட்டினம்,ஊட்டி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய பகுதிகளில் மருத்துவர்களை நியமனம் செய்வதில் இருக்கும் சவால்களையும் நினைவுக்கூர்ந்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/pm-modi-likely-to-visit-tamil-nadu-on-january-12-385012/