21 12 2021

Shanmuganthan passed away : முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் உதவியாளராக பணியாற்றி வந்தவர் சண்முகநாதன். கலைஞரின் மறைவிற்கு பிறகு ஓய்வில் இருந்த அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று அவர் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்ட நிலையில் திமுகவினர் அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் மிகச்சிறிய கிராமமான திருக்கண்ணமங்கையில் நதஸ்வர வித்வானின் மூத்த மகனாக பிறந்தவர் சண்முகநாதன். 1942ம் ஆண்டு பிறந்த அவருக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 நபர்கள். அம்மையப்பன் பள்ளியிலும் பிறகு வி.எஸ்.டி. பள்ளியில் படித்த அவர் படிப்பு முடிந்ததும் திருவாரூர் கூட்டுறவு வங்கியில் எழுத்தர் பணியில் மாதம் ரூ. 50 என்ற சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட நிழல் என்று தான் கூற வேண்டும். இந்த வாழ்வு கலைஞருக்கானது என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டிருந்தவர் சண்முகநாதன். திருவாரூரில் துவங்கிய தன்னுடைய வாழ்க்கை சென்னையில் இப்படி மாறும் என்று அவரும் கூட எதிர்பார்த்திருக்க முடியாது. கலைஞரின் அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கிய காலக்கட்டத்திலும் எந்நேரமும் கோபல்லபுரம் வீட்டில் ஒருவரை பார்க்க முடியும் என்றால் அது சண்முகநாதன் என்று தான் இருக்கும். பல சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டும் கூட கலைஞரை விட்டு விலகாத நிழல் போல் அவர் வாழ்ந்தார்.
சண்முகநாதன் என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றும் நபர் என்பதைக் காட்டிலும் என்னுடைய அகத்திலேயே இருந்து பணியாற்றும் நபர் என்று தான் கூறவேண்டும். வெறும் சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர் சண்முகநாதன் என்று பல சந்தர்ப்பங்களில் கலைஞர் கூறியதும் உண்டு.
source https://tamil.indianexpress.com/tamilnadu/kalaignar-karunanidhis-assistant-shanmuganthan-passed-away-386193/