சுகாதார செயல்திறன் தரவரிசை குறித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ட்விட்டர் பதிவு விமர்சனத்துள்ளாகி உள்ளது.
நேற்று (27.12.2021) நிதி ஆயோக் அமைப்பு 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிதி சுகாதார செயல்திறன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் ஒட்டுமொத்த சிறந்த சுகாதார செயல்திறனுக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2 ஆம் இடம் பிடித்தது. இந்தப் பட்டியலில் கேரளா முதலிடம், உத்திர பிரதேசம் கடைசி இடம் பிடித்தன.
இந்தநிலையில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தரவரிசை குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் விமர்சனத்துள்ளாகியுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ”நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகம் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது”, என பதிவிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏனெனில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான தரவரிசை 2019-2020 காலகட்டத்திற்கானது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தது. நெட்டிசன்களில் சிலர் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொரோனா கால சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில் தான் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதல் என்பதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.