புதன், 22 டிசம்பர், 2021

சண்முகநாதன் கலைஞரின் உதவியாளராக சேர்ந்தது எப்படி தெரியுமா?

Karunanidhi PA, Shanmuganathan passed away, today news, tamil news

“நாம் விரும்பி தாலி கட்டிக்கிட்ட பொண்டாட்டி மாதிரி தலைவர்” அவருடைய கோபம் நிமிடங்களை தாண்டாது என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள் என்று அன்பில் சமாதானப்படுத்த தன்னுடைய 50 வருட பணியில் இரண்டு முறை தான் கோபித்துக் கொண்டு கலைஞரை விட்டு விலகி இருந்துள்ளார் சண்முகநாதன். நல்ல நண்பன், அகத்தில் இருந்து பணியாற்றும் நபர், கலைஞரின் மன ஓட்டத்தை முன்பே அறிந்து அறிவித்து மற்றவர்களின் போக்கை அன்று தீர்மானிக்கும் அனைத்துவிதமான நபருமாக வாழ்ந்திருக்கிறார் சண்முகநாதன். சண்முகநாதனுக்கும் கலைஞருக்குமான உறவு அலுவல் ரீதியை தாண்டியும் பல சமயங்களில் நல்ல புரிதலுடன் கூடிய உறவாக இருந்துள்ளது.

சண்முகநாதனின் இளம் வயது வாழ்க்கை அவ்வளவு எளிமையானதாக இல்லை. திருவாரூர் திருக்கண்ணமங்கையூரில் நாதஸ்வர வித்வானாக இருந்த கோதண்டபாணியின் மூத்த மகனாக பிறந்தார். அவருக்கு பிறகு மூன்று தம்பிகளும், மூன்று தங்கைகளும் பிறந்தனர். மூத்த மகன் என்பதால் குடும்பப் பொறுப்புகளும் அதிகம். பள்ளிப்படிப்பை அம்மையப்பனிலும், வி.எஸ்.டி. பள்ளியிலும் படித்த அவர் பிறகு திருவாரூர் கூட்டுறவு வங்கியில் எழுத்தர் பணியில் மாதம் ரூ. 50 என்ற சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார். 

சர்வீஸ் கமிஷன் தேர்வுகளுக்கு படித்து தேர்ச்சி பெற்ற அவர் பிறகு சென்னை சிட்டி போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் மாத சம்பளம் ரூ. 135க்கு வேலைக்கு சேர்ந்தார். வீட்டுக்கு கொடுத்தது போக மீதம் வெறும் ரூ. 60-ஐ வைத்து வாழ்க்கையை நடத்தினார். ஆனாலும் விடாமுயற்சியுடன் பணியாற்றினார். என்.வி.எஸ். பட்டணம் பொடி நிறுவனத்தில் காலை 5 மணி முதல் 8 மணி வரை வெறும் ரூ.50 சம்பளத்திற்கு பகுதி நேர வேலையும் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு போட வைத்த சண்முகநாதனின் பணி; பின்னாளில் பி.ஏ.வாக வருமாறு கேட்ட கலைஞர்

இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் ஓங்கி ஒலித்த காலம் அது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள் மற்றும் தகவல்களை பதிவு செய்வது மிகப்பெரிய வேலையாக இருந்தது. முதல் நாள் காலை ஆரம்பித்து அடுத்த நாள் மதியம் கழிவறைக்கு கூட செல்லாமல் வேலை செய்த நாட்கள் எல்லாம் உண்டு என்று புத்தகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார். அப்படி போராட்டங்கள் உச்சம் பெற்ற நாட்களில் கலைஞரின் போராட்டத்தில் அவர் பேசுவதை குறிப்பெடுத்து சமர்பிக்கும் பணிக்கு சண்முகநாதன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே சென்றவர், கலைஞரின் ஒருவார்த்தை கூட இடம் மாறாமல் அப்படியே பதிவு செய்திருந்தார். அந்த அறிக்கையின் நகலை கலைஞருக்கு அனுப்பிய கையோடு, அவர் பேசிய கருத்திற்காக அவர் மீது வழக்கு பதிவும் சூழலும் ஏற்பட்டது. ஆனாலும் சண்முகநாதனின் திருத்தமான பணி கலைஞருக்கு பிடித்திருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவர் சண்முகநாதனை சந்திக்க ஆள் அனுப்பினார். என்னுடைய பி.ஏ.வாக வந்துவிடுகிறாயா என்று கேட்க கமிஷ்னர் ஆஃபிசில் சம்பளம் அதிகம். உங்கள் கீழ் வேலை பார்த்தால் சம்பளம் குறைவாக கிடைக்கும். கஷ்டப்படும் குடும்பம் என்று தன்னுடைய நிலைமையை விளக்க புரிந்து கொண்டு அவரை அனுப்பி வைத்தார் கலைஞர்.

சண்முகநாதனின் தந்தைக்கு விவகாரம் தெரியவர, சம்பளத்தைக் காட்டிலும் கலைஞரின் கீழ் வேலை பார்ப்பது நல்லது என்று ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால் சண்முகநாதன் திரும்பி வரும் சூழலில் கலைஞருக்கு இரண்டு உதவியாளர்கள் இருந்துள்ளனர். முதலில் சட்டமன்றத்திற்கு மாற்றுதலாகி வரவும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அனுப்பி வைத்தார் கலைஞர். அண்ணா மறைவுக்கு பிறகு முதல்வரின் உதவியாளராக பணியாற்ற வேண்டும். தங்கையின் திருமணத்திற்கு எடுத்த விடுப்பு ரத்து செய்யப்படுகிறது கிளம்பி வரவும் என்ற தகவல் வந்தடைய கலைஞரின் உதவியாளராக 1969ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி அன்று பணியில் சேர்ந்தார்.

கலைஞர் கருணாநிதியின் நிழல் சண்முகநாதன் மரணம்

கலைஞரின் மூன்று பி.ஏக்களின் வயது குறைந்தவர் என்பதால் குட்டி பி.ஏ. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சண்முகநாதனின் திருமணத்தின் போது அழகிரி, ஸ்டாலின் என அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆடைகள் எடுத்துக் கொடுத்து, ராசாத்தியின் நகைகளை மணப்பெண்ணுக்கு அணுவித்து விமர்சனமாக தங்கள் வீட்டு திருமணம் போன்றே திருமணத்தை சண்முகத்திற்கு நடத்தி வைத்தார் கலைஞர். சண்முகநாதனுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

சண்முகநாதனுக்காக ஒரு பதவியையே உருவாக்கிய கலைஞர்

1976-ல் ஆட்சி கைமாறிய போது கலைஞரின் கீழ் பணியாற்றிய பலரும் சென்றுவிட்டனர். ஆனாலும் தினமும் அலுவல் பணிகளை முடித்துவிட்டு கலைஞரை சந்தித்து வந்தார் சண்முகநாதன். பதவியை ராஜினாமா செய்துவிட என்று கலைஞர் சொல்ல, செயலாளர் ஆகும் அளவிற்கு வயதும் திறமையும் இருக்கிறது. அப்படி ஏதும் செய்ய வேண்டாம். மாறாக எதிர்க்கட்சித் தலைவருக்கு பி.ஏ. என்ற பொறுப்பை கேட்டு பேறுவோம் என்று மாறன் ஆலோசனை வழங்கியுள்ளார். எம்.ஜி.ஆருடன் சில மனக்கசப்புகளுக்கு பிறகு அந்த பதவியை பெற்று அதில் சண்முகநாதனை நிறுத்திவைத்தார் கலைஞர்.

எந்த தேர்தல் பணியாக இருந்தாலும், இதழுக்கு தேவையான கட்டுரைகள், கவிதைகள் என அனைத்தையும் கலைஞர் டிக்டேட் செய்ய அதனை எழுதி வந்தவர் சண்முகநாதன். திமுகவில் இருக்கும் போது சண்முகநாதனுடன் நல்ல நட்பில் இருந்த எம்.ஜி.ஆர். அஇஅதிமுகவை துவங்கிய போது கலைஞருடன் பணியாற்றிய அனைவரையும் தன்பக்கம் இழுக்கும் நோக்கில் செயல்பட்டார். ஆனாலும் விடாப்பிடியாக மறுத்துவிட்டார் சண்முகநாதன்.

அரசியல் பலிவாங்கல்கள் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளான போதிலும் கூட சண்முகநாதன் நிழல் போல கலைஞரை தொடர்ந்தவர். கட்சி செயல்பாடுகளும் நடமாட்டமும் கலைஞரிடம் குறைந்து போன போதும், தினமும் காலை 7 மணிக்கு தவறாது கோபல்லபுரம் வீட்டிற்கு சென்ற அவர் தன்னுடைய சிறிய அலுவலகத்தில் தனக்கான வேலையில் என்றும் மும்பரமாக பணியாற்றி வந்தார். இந்த இழப்பு திமுகவினருக்கு மாபெரும் இழப்பாக அமைந்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/shanmuganathan-shared-long-lasting-friendship-with-karunanidhi-386249/