வியாழன், 30 டிசம்பர், 2021

இனி புதிய மீட்டர்களுக்கு நீட்டிப்புக் கட்டணம் இல்லை – தமிழ்நாடு மின்சார வாரியம் சுற்றறிக்கை

 30 12 2021 நுகர்வோர்கள் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, மின் இணைப்புகளை நீட்டிக்கவும், புதிய உள்கட்டமைப்புகளை நிறுவவும் ஒரு குறிப்பிட்ட தொகையை தமிழ்நாடு மின்சார வாரியம் (டாங்கெட்கோ – TANGEDCO) வசூலிக்கிறது. உதாரணமாக, சென்னையில் ஏற்கனவே உள்ள மின்பாதையில் இருந்து நூறு மீட்டர் தொலைவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு புதிய மூன்று கட்ட இணைப்புக்கான (three-phase connection) நீட்டிப்பு செலவாக ரூ.90,000 செலுத்தப்பட்டுள்ளது.

இது போன்று நீட்டிப்புக் கட்டணம் வசூலிப்பது தமிழ்நாடு மின்சார விநியோகக் குறியீட்டிற்கு எதிரானது என்று தெரிவித்திருந்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC), இந்த விதிமீறலை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், நுகர்வோரிடமிருந்து வசூலித்த பணத்தையும் திருப்பிக் கொடுக்குமாறு கடந்த 2009ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

எனினும், மின்சார வாரியம் நீட்டிப்புக் கட்டணங்களைத் தொடர்ந்து வசூலித்து வந்ததுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட சில நுகர்வோர் உதவி கோரி ஆணையத்தை அணுகியுள்ளனர். அப்போது, ஆணையம் மின்சார வாரியத்திற்கு அதிகபட்சமாக 1 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது.

இதுதொடர்பாக ஆணையத்திடம் மனு அளித்திருந்த நுகர்வோர் உரிமைகள் ஆர்வலரான கே.கதிர்மதியோன், மின்சார வாரியம் அதிக அபராதம் செலுத்துவதைப் பொருட்படுத்தவில்லை என்றும், இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் வசூல் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மின்சார வாரியம் பணம் வசூலிக்க இதை ஒரு உத்தியாக பயன்படுத்துகிறது. சமீபத்தில் 2019ல் இந்தக் கட்டணங்களை 400% அதிகரித்தது. எனவே, சட்டவிரோதமாக நீட்டிப்புக் கட்டணம் வசூலிக்கத் தேவையில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், உள்கட்டமைப்பு செலவுகள் உயர்ந்துவிட்டதாகவும், புதிய சேவை இணைப்பு கோரிக்கைகளுக்கு நீட்டிப்புக் கட்டணங்களை வசூலிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மின்சார வாரியம் ஆணையத்தின் முன் வாதிட்டுள்ளது.

இந்நிலையில், கதிர்மதியோனின் மனுவை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆணையம், அவரது கோரிக்கைகளை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், நுகர்வோர் நிவாரணத்திற்காக அவர்கள் வீட்டு கதவுகளைத் தட்டுவதைத் தவிர்க்க சரியான நடவடிக்கை எடுக்குமாறும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 28) தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய மின் இணைப்புக்கு இனி கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு அனைத்து மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-tamil-news-tangedco-sends-circular-to-stop-collection-of-extension-charges-390150/