சனி, 18 டிசம்பர், 2021

கேரளாவில் அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல்; உஷார் நிலையில் தமிழக எல்லைப் பகுதிகள்

  கேரளாவில் பறவைக் காய்ச்சல் அதிகமாக பரவி வருகின்ற நிலையில் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில், கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து கோழி மற்றும் வாத்துகளை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் அப்பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருக்கும் கோழிகளை அழிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளனர் அதிகாரிகள்.

கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து கோழி மற்றும் இதர பறவை இறைச்சிப் பொருட்களை நீலகிரி பகுதிக்குள் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. அம்ரித் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கக்கனல்லா, நாடுகாணி, பாட்டவயல், சேரம்பாடி, தாளூர், ஆம்பளமூலா உள்ளிட்ட 8 சோதனைச் சாவடிகளில் துணைநிலை கால்நடை மருத்துவர், காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளானர். அதே போன்று கோவையிலும் 12 எல்லைப்புற சாவடிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் வருந்து வரும் வாகனங்களை கிருமி நீக்கம் செய்து மாவட்டத்திற்குள் அனுமதிக்க சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் அறிகுறி அல்லது கோழிகள் தொடர்ந்து மரணிக்கின்றன என்றால் உடனே மாவட்ட கால்நடை மருத்துவ துறைக்கு தகவல்கள் அளிக்கவும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் அறிவித்துள்ளார். கோவையில் மொத்தமாக 1203க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/bird-flu-in-kerala-surveillance-intensified-in-tn-border-areas-384404/