வெள்ளி, 31 டிசம்பர், 2021

வெளுத்து வாங்கிய கனமழை; ஸ்தம்பித்த தலைநகரம்; விடிய விடிய மீட்புப் பணியில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி ஊழியர்கள்

 31 12 2021 

Heavy Rain Lashed Chennai
மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்; மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை நேரி பார்வையிட்ட முதல்வர்

Heavy Rain Lashed Chennai: வியாழக்கிழமை அன்று (30/12/2021) சென்னை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் கடுமையான மழை பெய்தது. கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக மழை ஏதும் அதிக அளவில் பதிவாகாத நிலையில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. பல மணி நேரங்களாக தொடர்ந்த மழையின் காரணமாக சாலைகள் மற்றும் சப்-வேக்களில் நீர் தேங்கி, வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை அளித்தது இந்த மழை.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி எம்.ஆர்.சி. நகரில் 17.65 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 14.65 செ.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 10 செ.மீ மழையும் பதிவானது. 2015ம் ஆண்டுக்கு பிறகு அதிகப்படியான மழையை ஒரே நாளில் சென்னை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் நேற்றிரவு ஆய்வு செய்தார். பிறகு சென்னை ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தை பார்வையிட்ட முதல்வர் வெள்ள பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

சென்னையில் பெய்த மழையின் அளவு (மாலை 6 மணி வரை)

மயிலாப்பூர் – 207 மி.மீ
எம்.ஆர்.சி. நகர் – 175 மி.மீ
நுங்கம்பாக்கம் – 140 மி.மீ
ஆழ்வார்பேட்டை – 133 மி.மீ
நந்தனம் – 100 மி.மீ
மீனம்பாக்கம் – 98 மி.மீ
வளசரவாக்கம் – 94 மி.மீ
ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி – 87 மி.மீ.
செம்பரம்பாக்கம் – 82 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் – 81 மி.மீ
தொண்டையார்பேட்டை – 72 மி.மீ
முகப்பேறு – 71 செ.மீ

கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீப் ஜான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “200 மி.மீ தாண்டியது மயிலாப்பூர். சென்னை நுங்கம்பாக்கம் 2015ம் ஆண்டு ரெக்கார்டை தோற்கடித்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.

3 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் ஆர்.பி.ஜி. சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது

வானிலை அறிவிப்பு

இன்று காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/heavy-rain-lashed-chennai-chennai-city-records-highest-one-day-december-shower-in-6-years-390626/