வெள்ளி, 24 டிசம்பர், 2021

உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய யிங்லியாங் முட்டை

 23 12 2021 

Yingliang Dinosaur baby embryo

Baby Yingliang dinosaur embryo : தெற்கு சீனாவில் உள்ள கன்ஜோவ் பகுதியில் இருந்த பாறைகளுக்கு மத்தியில் ஆராய்ச்சியாளர்கள் 72 முதல் 66 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த டைனோசர் முட்டையின் படிமங்களை கண்டறிந்துள்ளனர். பற்களற்ற தெரோபோட் டைனோசர் ( theropod dinosaur) குழுவான ஒவிராப்டோரோசர் (oviraptorosaur) பிரிவை சேர்ந்த இந்த டைனோசர் முட்டைக்கு ஆராய்ச்சியாளர்கள் யிங்க்லியாங்க் என்று பெயர் சூட்டியுள்ளனர். ஒவிராப்டோரோசர் க்ரெடாசியஸ் காலத்தில் (145 to 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் வாழ்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த முட்டைக்குள் டைனோசர் படுத்திருக்கும் விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று தான் கூற வேண்டும். உடலின் முன்பகுதியை முன்னங்கால்களுக்கு மத்தியில் வைத்து டைனோசர் படுத்திருக்க, அதன் முதுகுப்புறம் முட்டையின் மேற்பக்கத்தில் வளைந்திருக்கிறது. “நீங்கள் தற்போது டைனோசரின் குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். சரியாக முட்டையில் இருந்து டைனோசர் வெளியே வருவதற்கு சற்று முந்தைய வளர்ச்சி நிலையை அந்த டைனோசர் அடைந்துள்ளது” என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த டைனோசர் முட்டை பார்க்க இன்றைய கால பறவைகளின் முட்டை போன்று இருக்கிறது. எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஸ்டீவ் ப்ரூசேட் “நான் இதுவரை பார்த்த படிமங்களில் மிகவும் அழகானது இது. பிறக்காத இந்த டைனோசர் குட்டி, முட்டைகளில் பறவைக்குஞ்சுகள் சுருண்டு படுத்திருப்பதைப் போன்று படுத்திருக்கிறது. இது டைனோசர் மூதாதையர்களிடம் இருந்து தான் பறவைகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை உறுதி செய்ய மேலும் ஒரு ஆதாரமாக விளங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த டைனோசர் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஐசையன்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. 17 செமீ நீளம் கொண்டுள்ள முட்டைக்குள் இந்த டைனோசர் இருந்திருக்கிறது. தலை முதல் வால் வரை இந்த டைனோசரின் மொத்த நீளம் 17 செ.மீ ஆகும். சீனாவின் யிங்க்லியாங்க் ஸ்டோன் நேச்சர் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை பெறப்பட்டுள்ள டைனோசர்களின் படிமங்களில் பெரும்பாலானவை முழுமையாக கிடைக்கவில்லை. முட்டைக்குள் இருந்த இந்த படிமம் முழுமையாக எங்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மற்றொரு ஆராய்ச்சியாளரான ஃபியோன் வைசும் மா கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/international/baby-yingliang-dinosaur-embryo-discovered-inside-fossilised-egg-387128/