22 12 2021 : செவ்வாயன்று, ராஜ்யசபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021, “ஆதார் தரவுகளுடன் வாக்காளர் பட்டியல் தரவை இணைப்பதை” செயல்படுத்துகிறது, இம்மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இந்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மசோதாவை கொண்டு வருவதற்கான அரசின் வாதம் என்ன?
நீண்ட காலமாக விவாதிக்கப்பட்ட பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்கள் இந்த மசோதாவில் உள்ளடங்கியுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம், ஒரே நபர் வெவ்வேறு இடங்களில் பல பதிவுகளைச் செய்யும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என அரசாங்கம் கூறுகிறது. “ஆதார் இணைக்கப்பட்டதும், ஒரு நபர் புதிய பதிவுக்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம், வாக்காளர் பட்டியல் தரவு அமைப்பு, முந்தைய பதிவு(கள்) இருப்பதை உடனடியாக எச்சரிக்கும். இது வாக்காளர் பட்டியலை அதிக அளவில் சுத்தம் செய்வதற்கும், வாக்காளர்கள் அவர்கள் ‘சாதாரணமாக வசிக்கும்’ இடத்தில் வாக்காளர் பதிவை எளிதாக்குவதற்கும் உதவும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி ராஜ்யசபாவில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட அமைச்சகத்தின் மானிய கோரிக்கைகள் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை கீழ்கண்டவாறு கூறியது: “தனிப்பட்ட ஆதார் அடையாள அட்டை எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்து வருகிறது. இது வாக்காளர்கள் குடியிருப்பை மாற்றும் போது EPICல் மாற்றங்களை ஒழுங்குப்படுத்தும். தேர்தல் ஜனநாயகத்தில் தேவைப்படும் வாக்காளர்களின் பல நுழைவு நிகழ்வுகளும் அகற்றப்படலாம்…”
நாடாளுமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தன்னார்வமானது. இது உத்தரவோ கட்டாயமோ அல்ல”. மசோதா கொண்டு வரப்படுவதற்கு முன்பு அரசாங்கம் தேர்தல் ஆணையத்துடன் “பல விவாதங்களை” நடத்தியதாக அமைச்சர் கூறினார்.
தேர்தல் ஆணையத்துடனான விவாதங்கள் என்ன?
மார்ச் 2015 இல், தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு மற்றும் அங்கீகாரத் திட்டத்தைத் தொடங்கியது, இது போலிப் பெயர்களை நீக்கும் முயற்சியில் ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்க முயன்றது. தேர்தல் ஆணையம் மே 2015 இல் வெளியிட்ட அறிக்கையில் கீழ்கண்டவாறு கூறியது: “இந்தத் திட்டத்தின் கீழ், வேறு சில செயல்பாடுகளைத் தவிர, வாக்காளர்களின் EPIC தரவை ஆதார் தரவுகளுடன் இணைப்பதும் மற்றும் அங்கீகரிப்பதும் செய்யப்படுகிறது…” இருப்பினும், தேர்தல் ஆணையம் “மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு (CEOS) தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியது. அதில் வாக்காளர்கள் ஆதார் எண்ணை வழங்குவது கட்டாயமில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அது விருப்பமானது மட்டுமே என்றும் குறிப்பிடுகிறது.
அதே ஆண்டு, உச்ச நீதிமன்றம், “ஆதார் அட்டை இணைப்பு திட்டம் முற்றிலும் தன்னார்வமானது, இந்த விஷயத்தை இந்த நீதிமன்றம் ஒரு வழி அல்லது வேறு வழியில் முடிவு செய்யும் வரை அதை கட்டாயமாக்க முடியாது” என்று தெளிவுபடுத்தியது.
இந்த ஆண்டு ஏப்ரலில், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை இணைப்பது உள்ளிட்ட நிலுவையில் உள்ள தேர்தல் சீர்திருத்தங்களை “விரைவாக பரிசீலிக்க” கோரி, சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. இந்த வார தொடக்கத்தில், சட்ட அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, நவம்பர் 16 அன்று, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சில சீர்திருத்தங்கள் குறித்த அமைச்சரவைக் குறிப்பை இறுதி செய்ய பிரதமர் அலுவலகம் கோரிய முறைசாரா உரையாடலில் தேர்தல் ஆணையம் கலந்து கொண்டது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் என்ன?
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணீஷ் திவாரி கூறியதாவது: வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதாரை இணைப்பது, உச்ச நீதிமன்ற தீர்ப்பில் வரையறுக்கப்பட்ட தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது.
AIMIM எம்பி அசாதுதீன் ஓவைசி, இந்த மசோதா சட்டமாக மாறினால், அரசாங்கம் வாக்காளர் அடையாள விவரங்களை “சிலரின் வாக்குரிமையை மறுப்பதற்கும் குடிமக்களின் சுயவிவரங்களை தெரிந்து கொள்வதற்கும்” பயன்படுத்த முடியும் என்றார். “இந்த மசோதா இந்த அவையின் சட்டமியற்றும் தகுதிக்கு அப்பாற்பட்டது… வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது புட்டசாமி வழக்கில் வரையறுக்கப்பட்ட தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது,” என்று ஓவைசி கூறினார்.
அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “தற்போதைய சட்ட விதிகளில் சில வேறுபாடுகள் மற்றும் சில குறைபாடுகள் உள்ளன, அதை நீக்க, அரசாங்கம், தேர்தல் கமிஷனுடன் கலந்தாலோசித்து, தேர்தல் கமிஷன் அளித்த பரிந்துரைகளை இணைத்து, இந்த திருத்தங்களை கொண்டு வந்துள்ளது” என்றார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பல்வேறு பிரிவுகளுக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து அமைச்சர் விரிவாகக் கூறினார்.
அமைச்சர் ரிஜிஜு, தனிநபர், பொதுமக்கள் குறைகள் மற்றும் சட்டம் மற்றும் நீதிக்கான துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 105வது அறிக்கையை மேற்கோள் காட்டினார். இது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது வாக்காளர் பட்டியலைச் சுத்திகரிக்கும் மற்றும் அதன் விளைவாக தேர்தல் முறைகேடுகளைக் குறைக்கும் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது.
பல வாக்காளர் பட்டியல்களில் தோன்றும் பெயர்களை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல் என்ன?
இணைப்பு கட்டாயமாக்கப்படாவிட்டால், மசோதா செயல்படுத்தப்படுவது வெற்றிகரமாக இருக்குமா என்பது கவலைகளில் ஒன்றாகும். இந்த மசோதா சில தேர்தல் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 ஆகியவற்றைத் திருத்துகிறது.
1950 ஆம் ஆண்டு சட்டம் மக்கள் தங்களது பெயரைச் சேர்க்க தேர்தல் பதிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். தேர்தல் பதிவு அதிகாரி அவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய, மக்கள் தங்களது ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்று மசோதா கூறுகிறது. வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் ஏற்கனவே இருந்தால், பட்டியலில் உள்ள பதிவுகளை அங்கீகரிக்க ஆதார் எண் தேவைப்படலாம், ஆனால் மக்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மறுக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்களின் ஆதாரை காட்ட முடியாவிட்டால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படாது.
சட்டக் கொள்கைக்கான ’விதி’ மையத்தின் நிறுவனரும் ஆராய்ச்சி இயக்குநருமான அர்க்யா சென்குப்தா கீழ்கண்டவாறு கூறினார்: “ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிக்கும் போலியான வாக்குப்பதிவு நடைபெறுவதுதான் முதல் நியாயம்… நீங்கள் வாக்களிக்கச் செல்லும் போதெல்லாம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை வழங்குவது கட்டாயமாக இருந்தால் மட்டுமே இது செயல்படும். இருப்பினும், சட்டத்தில் உள்ள இந்தப் பிரிவு சற்று சிக்கலானது, ஏனெனில் இது தன்னார்வமாகத் தோன்றினாலும், எனது ஆதாரை இணைக்க வேண்டாம் என்று நான் தேர்வுசெய்யும் காரணங்களை ‘போதுமான காரணத்திற்காக’ என்று அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட வேண்டும். இப்போது அதற்கான போதுமான காரணம் என்னவாக இருக்கும் என்று மசோதாவில் குறிப்பிடப்படவில்லை… இது தெளிவாக்கப்பட வேண்டும்.
வேறு கவலைகள் உள்ளதா?
ஆதாரை இணைப்பதன் மூலம் குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களிக்க முடியும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. காங்கிரஸ் எம்பி சசி தரூர் மக்களவையில் பேசுகையில், “வாக்காளர்களுக்கு ஆதார் கேட்கும் நிலையில் நீங்கள் இருந்தால், நீங்கள் பெறுவது வசிப்பிடத்தை பிரதிபலிக்கும் ஆவணம் மட்டுமே. குடியுரிமையை பிரதிபலிக்கும் ஆவணம் அல்ல. நீங்கள் குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களிக்க உதவுகிறீர்கள் என்றார்.
அர்க்யா சென்குப்தா, “நேபாளிகள் மற்றும் வங்காளதேசியர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அது நடக்காமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இங்கே ஒரு கருத்தியல் குழப்பம் உள்ளது… ஆதார் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல, அது ஆதார் சட்டத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குடிமக்களால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதை நாம் அறிவோம். குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களிப்பதில் இருந்து இது எவ்வாறு தடுக்கப்படும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஏனெனில் குடிமக்கள் அல்லாதவர்கள் ஆதார் அட்டையை வைத்திருக்கலாம்… குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களிப்பதைத் தடுப்பது ஆதார் மூலம் தீர்க்கப்படாது.
CPI(M) ஒரு அறிக்கையில் எழுப்பிய மற்றொரு கவலை, இந்த மசோதா வாக்களித்தலின் இரகசியத்தை மீறும் வகையில், இரகசிய வாக்கெடுப்பு என்ற கொள்கையையும், வாக்காளரின் தனியுரிமைக்கான அடிப்படை உரிமையையும் மீறுவதாக உள்ளது.
தனிப்பட்ட வாக்குகளை அப்படி கண்காணிக்க முடியுமா?
“வாக்காளர் ஐடிகளுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் வாக்களிக்கும் விருப்பங்களை தனிப்பட்ட முறையில் அடையாளம் காண்பது சாத்தியமில்லை என்றாலும், அது தனிநபர் விவரக்குறிப்புகளை தெரிந்துக்கொள்ள வழிவகுக்கும்” என்று இணைய சுதந்திர அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் அபர் குப்தா கூறினார். மேலும், “ஒரு நபரின் அடையாளச் சரிபார்ப்பு என்பது, ஒரு நபர் வாக்களிக்கச் செல்லும் போது, வாக்குச் சாவடிகளில் ஏற்கனவே நடக்கும் அடையாளத்தை காண்பதில் இருந்து வேறுபட்டதாகும். ஆனால் தரவுகளின் அடிப்படையில் பெரிய திட்டங்கள் வடிவமைக்கப்படக்கூடிய பிற சேவைகளுடன் அதை இணைக்க இது அரசாங்கத்திற்கு உதவக்கூடும்…” அவர் கூறினார்: “மற்றொரு கவலை என்னவென்றால் ஆதார் தரவு கசிந்ததாக ஆவணப்படுத்தப்பட்ட வழக்கு உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரான இலக்கு அரசியல் பிரச்சாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கலாம்.
ஏப்ரல் 2019 இல், யுஐடிஏஐ அதன் தரவுத்தளங்களில் சேமித்து வைத்திருந்த ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் 7,82,21,397 ஆதார் வைத்திருப்பவர்களின் விவரங்களை சட்டவிரோதமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டி, ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான ஐடி கிரிட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் மீது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) போலீஸில் புகார் அளித்தது. UIDAI சேவையகங்களின் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகக் கவலைகள் எழுப்பப்பட்டன, அந்த நேரத்தில் ஆணையம் இதனை மறுத்துவிட்டது. இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றப்பட்டது, ஆனால் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
source https://tamil.indianexpress.com/explained/election-laws-amendment-bill-linking-voter-rolls-to-aadhaar-386617/