25 12 2021 உலகம் முழுவதும் கோவிட் தொற்றின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் கவலை அளிக்கும் வகையில் பரவி வருகிறது. உத்திரப்பிரதேசம், ம.பி. , உத்திரகாண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று தளர்வுகள் மற்றும் விதிமுறைகளை நீட்டித்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர், சௌமியா ஸ்வாமிநாதன், ப்ரதீப் கவுர், ஐ.எம்.சி.ஆர். உறுப்பினர்கள் உட்பட பல துறைசார் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்டாலினிடம் ஒமிக்ரான் தொற்றின் இயல்பு மற்றும் அதற்கு மாநில அளவில் இருக்கும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் தரப்பட்டது. புத்தாண்டு மற்றும் பொங்கல் காலம் நெருங்கி வருவதால் மக்கள் கூட்டம் சேராமல் இருக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
வியாழக்கிழமை அன்று இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நபர்களில் 3 உடல் நலம் தேறி வீட்டிற்கு சென்றுள்ளனர். தமிழக அரசு புதிய தடைகள் எதையும் விதிக்கவில்லை. அதே நேரத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய தடைகளை அமல்படுத்தும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒமிக்ரான் பரவல் 10% நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க திட்டம்- முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது.
வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும். தனிமனிதர் இடைவெளியை பின்பற்றுங்கள். கூட்டம் கூடுவதை முடிந்த அளவிற்கு தவிர்க்கவும். வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பொதுமக்களிடம் இந்த வேண்டுகோள்களை முதல்வர் முன்வைத்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/omicron-no-new-night-curfew-in-tamil-nadu-stalin-holds-high-level-meeting-387857/