சென்னை கலெக்டர் விஜயராணி காங்கிரஸ் எம்.பி. டாக்டர் விஷ்ணுபிரசாத்தை உட்கார விடாமல் நிற்கவைத்து அவரியாதையாக நடத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஆரணி மக்களவைத் தொகுதி எம்.பி டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத். இவருடைய தந்தை கிருஷ்ணசாமி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் எம்.பி விஷ்ணுபிரசாத் கடந்த வாரம், சில பிரச்சனைகள் குறித்து தகவல்களைக் கேட்பதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியின் அலுவலகத்துக்கு சென்று சந்தித்திருக்கிறார். அப்போது, சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தனது இருக்கையில் அமர்ந்தபடி, காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத்தை நீண்ட நேரம் நிற்க வைத்து பேசியுள்ளார்.
கலெக்டர் விஜயராணி இப்படி சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத்தை உட்கார வைக்காமல் நிற்க வைத்ட்துளார். காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத் தனது அடையாள அட்டையையும் கொடுத்துள்ளார். ஆனாலும், கலெக்டர் விஜயராணி அவரை நிற்க வைத்து பதில் அளித்துள்ளார். அப்போதும்கூட அவரை உட்காரச் சொல்லவில்லை என்று விஷ்ணு பிரசாத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத், கலெக்டரிடம் எந்த வாக்குவாதமும் செய்யாமல் வீட்டுக்கு வந்துள்ளார். விட்டுக்கு வந்த எம்.பி விஷ்ணு பிரசாத் சென்னை கலெக்டர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனையை எழுப்புவது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் பிரதிநிதியான ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை அளிக்காமல் நடந்துகொண்டது பற்றி, நாடளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்னையாக எழுப்புவதற்கு முன்பு, இந்த விவகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு தெரிவியுங்கள். அதன் பிறகு, இதை உரிமை மீறல் பிரச்னையாக நாடாளுமன்றத்தில் எழுப்புவது பற்றி யோசிக்கலாம் என்று அவருக்கு ஆலோசனை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி டாக்டர் விஷ்ணு பிரசாத், சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி, தன்னை உட்காரவிடாமல் நிற்கவைத்து மரியாதைக் குறைவாக நடத்தியது குறித்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு செல்போனில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். உடனடியாக, அவருக்கு பதிலளித்த தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியைத் தொடர்புகொண்டு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத்திடம் வருத்தம் தெரிவியுங்கள். இல்லாவிட்டால் இது தொடர்பான பிரச்னையை நீங்கள்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியும் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, காங்கிரஸ் எம்.பி விஷ்ணுபிரசாத்துக்கு போனில் தொடர்புகொண்டு நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத் மாவட்ட ஆட்சியர் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான பதவி. அதை முடிந்தவரை சிறப்பாக செய்யுங்கள். குறைந்தபட்சம் உங்களை சந்திக்க வரும் சாமானியர்களை உட்கார வைக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை கலெக்டர் விஜயராணி, காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத்தை உட்கார விடாமல் நிற்கவைத்து பேசிய இந்த விவகாரம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் விவாதமாகியுள்ளது. இதே போல, கடந்த அதிமுக ஆட்சியில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறனை அப்போதைய தலைமைச்செயலர் சண்முகத்தை சந்திக்க சென்றபோது மரியாதைக்குறைவாக நடத்தியதை கண்டித்து, திமுக எம்.பி.க்கள் தலைமைச் செயலாளர் சண்முகம் மீது உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பும் கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்தனர்.
அந்த வகையில், சென்னை கலெக்டர் விஜயராணி காங்கிரஸ் எம்.பி விஷ்ணுபிரசாத்தை உட்கார விடாமல் மரியாதைக் குறைவான வகையில் நிற்கவைத்து பேசிய விவகாரம், விஜயராணி மன்னிப்பு கேட்டதையடுத்து முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஷ்ணு பிரசாத் இந்த விஷயத்தை இத்துடன் விடாமல், நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் புகாராக எழுப்ப உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-collector-insults-congress-mp-mk-vishnu-prasad-389336/