திங்கள், 27 டிசம்பர், 2021

அந்நிய நபர் பெண்ணை அனுமதியின்றி தொடுவது கண்ணியத்தை மீறும் செயல்: ஐகோர்ட்

 26 12 2021 ஒரு பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைத்ததற்காக 36 வயது நபருக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், புகார் அளிப்பதற்காக கணவரின் வருகைக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை தவறாக இருக்க முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் படுக்கையில் காலடியில் அமர்ந்திருக்கும் மனுதாரரின் நடத்தை பாலியல் நோக்கம் கொண்டது என்றும் நள்ளிரவில் ஒரு அந்நிய நபர் பெண்ணின் உடலின் எந்தப் பகுதியையும் அவளது அனுமதியின்றி தொடுவது அவளுடைய கண்ணியத்தை மீறும் செயல்” என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் தனக்கு அளித்த தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜல்னாவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஆகஸ்ட் 21ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பரமேஷ்வர் தாகே என்பவர் செய்த குற்றவியல் மேல்முறையீடு மனுவில் நீதிபதி முகுந்த் ஜி செவ்லிகரின் தனி நீதிபதி அமர்வு டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

பிரிவு 451-ன் கீழ் வீட்டு அத்துமீறல் சிறைத்தண்டனையுடன் கூடிய தண்டனைக்குரிய குற்றம் மற்றும் 354-A (i) உடல் தொடுதல் மற்றும் விரும்பத்தகாத மற்றும் வெளிப்படையான பாலியல் நடவடிக்கைகள் உள்ளடக்கிய செயல்கள் ஆகிய தண்டனைக்குரிய குற்றங்களுக்காக அவர் குற்றவாளி என தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ஐகோர்ட் அமர்வு நீதிபதி உறுதி செய்தார்.

இதில், பாதிக்கப்பட்ட பெண் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-ன்படி, ஜூலை 4, 2014 அன்று, அவரது கணவர் கிராமத்திற்குச் சென்றிருந்ததால், அவரும் அவரது பாட்டியும் மட்டுமே அவர்களது வீட்டில் இருந்தனர். இரவு 8 மணியளவில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரது கணவர் எப்போது திரும்புவார் என்று விசாரித்தார். பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் இரவு திரும்பி வரமாட்டார் என்று பதிலளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் இரவு 11 மணிக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு, அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டின் பிரதான கதவை உள்பக்கமாக பூட்டாமல் மூடி வைத்துள்ளார். யாரோ தன் கால்களைத் தொடுவதை உணர்ந்த பிறகு, அந்த பெண் எழுந்துபார்த்தபோது குற்றம் சாட்டப்பட்டவர் தன் கட்டிலில் அந்த பெண்ணின் கால்களுக்கு அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது பாட்டி கூச்சலிட்டதை அடுத்து, மனுதாரர் ஓடியிருக்கிறார். இதில், பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் குறித்து தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்தார். மறுநாள் காலை கணவர் திரும்பி வந்து குற்றவாளிக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தார்.

மனுதாரரின் வழக்கறிஞர் பிரதிக் போஸ்லே, அரசுத் தரப்பு வழக்கின்படி, கதவு உள்ளே இருந்து பூட்டப்படவில்லை, இது பாதிக்கப்பட்டவரின் சம்மதத்துடன் விண்ணப்பதாரர் வீட்டிற்குள் நுழைந்ததைக் குறிக்கிறது என்று கூறினார்.

“விவரமறிந்தவர்கள் அவரது பாட்டி வீட்டில் தனியாக இருக்கும்போது, ​​பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் பெண்கள் கதவை உள் பக்கம் பூட்டிக்கொள்வார்கள்” என்று அவர் கூறினார். மனுதாரர் எந்தவிதமான பாலியல் நோக்கமும் இல்லாமல் பாதிக்கப்பட்டவரின் கால்களை மட்டுமே தொட்டார் என்று கூறினார்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாகவும், அதற்கான விளக்கம் அளிக்கப்படாததால், விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிப்பதில் கடுமையான தவறு செய்துள்ளதாகவும் போஸ்லே வாதிட்டார்.

இருதரப்பு வாதங்கள் எழுத்துப் பூர்வமாக சமர்ப்பித்தபின், பதிவுகளில் உள்ள விஷயங்களைப் பார்த்த பிறகு, நீதிபதி செவ்லிகர் குறிப்பிட்டார்: “மனுதாரரின் செயல் எந்தப் பெண்ணின் கண்ணியத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் திறன் கொண்டது என்பது தெளிவாகிறது. இந்த வழக்கில், மனுதாரர் பாதிக்கப்பட்ட பெண்ணின் காலடியில் அமர்ந்து, அவரது கால்களைத் தொட்டு, அவரது கட்டிலில் அமர்ந்திருந்தார். இந்த நடத்தை பாலியல் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவரின் வீட்டில் நள்ளிரவில் தனியாக இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை.” என்று கூறினார்.

நள்ளிரவு நேரத்தில் அந்த பெண்ணின் வீட்டில் அவர் ஏன் இருந்தார் என்ற கேள்விக்கு மனுதாரரின் வழக்கறிஞர் திருப்திகரமான பதில் எதையும் அளிக்க முடியவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். புகாரை பதிவு செய்ய கணவரின் வருகைக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை தவறாக இருக்க முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர்நீதிமன்ற அமர்வு “ஒரு பெண்ணின் உடலின் எந்தப் பகுதியையும் அவளது அனுமதியின்றி, அதுவும் நள்ளிரவு நேரத்தில் அந்நியர் தொடுவது ஒரு பெண்ணின் கண்ணியத்தை மீறும் செயல். மனுதாரர் எந்த உயர்ந்த நோக்கத்துடனும் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் நுழையவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இரவில் வீட்டில் இருக்க மாட்டார் என்பதை அவர் மாலையில் உறுதி செய்தார்… இது விண்ணப்பதாரர் பாலியல் நோக்கத்துடன் அங்கு சென்று தகவல் கொடுத்தவரின் கண்ணியத்தை மீறியதை தெளிவாகக் காட்டுகிறது. எனவே, மனுதாரர் பாதிக்கப்பட்ட பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் எந்த தவறும் செய்யவில்லை” என்று தீர்ப்பளித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/india/bombay-high-court-stranger-touching-womans-body-without-consent-amounts-to-violation-of-her-modesty-388437/