வெள்ளி, 31 டிசம்பர், 2021

ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி 12% ஆக உயர வாய்ப்பு.. 15 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

 GST on textiles likely to rise to 12 percentage;15 lakh people at risk of losing their jobs

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு,மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிச் சீர்திருத்தம் மீதான ஆய்வு அறிக்கைகளை மாநில நிதியமைச்சர்கள் குழு, நேரடியாக சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சில பொருள்கள் மீதான வரிவிகிதத்தை மாற்றியமைப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

ஜிஎஸ்டி-யின் கீழ், தற்போதைய விகித கட்டமைப்பை மதிப்பாய்வு செய்ய அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு (GoM), அதன் இறுதிக் கூட்டத்தை நவம்பர் 27 அன்று ஒத்திவைத்தது. இதில் விகிதப் பகுப்பாய்வு மற்றும் வருவாயை உயர்த்துவதற்கான பல்வேறு திட்டங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது.

அதன்படி, வரி விகிதங்களை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் உயர்த்த அதிகாரி அளவிலான குழு பரிந்துரைத்துள்ளது.

ஆனால் சில மாநில நிதியமைச்சர்கள், குறிப்பாக தொற்றுநோய்க்குப் பிறகு, இத்தகைய பெரிய விகித உயர்வுகளின், பணவீக்க தாக்கம் குறித்து கவலைகளை எழுப்பினர்.

பூஜ்யம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என ஜிஎஸ்டியில் ஐந்து வரி அடுக்குகள் உள்ளன. இழப்பீடு வரி, 1 சதவீதத்திலிருந்து 290 சதவீதம் வரையிலும், குறைபாடுகள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு, உச்சமாக 28 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்கப்படுகிறது.

மேலும் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை, 5 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கவுன்சில் கூட்டத்தில் ஜவுளி விலை உயர்வு குறித்த முடிவை சில மாநிலங்கள் எதிர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம், மேற்கு வங்க முதல்வரின் முதன்மை தலைமை ஆலோசகர் அமித் மித்ரா, முன்மொழியப்பட்ட உயர்வை திரும்பப் பெறுமாறு சீதாராமனிடம் வலியுறுத்தினார். புதிய கட்டண அமைப்பால் தேசிய அளவில், சுமார் 1 லட்சம் ஜவுளி யூனிட்கள் மூடப்படுவதோடு, சுமார் 15 லட்சம்பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றார்.

தெலங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ், ஜிஎஸ்டி விகிதங்களை உயர்த்தும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/gst-on-textiles-likely-to-rise-to-12-percentage-15-lakh-people-at-risk-of-losing-their-jobs-390296/