வியாழன், 30 டிசம்பர், 2021

மூன்றாம் அலை சென்னையில் தொடங்கிவிட்டதா? ஒரே நாளில் தினசரி பாதிப்பு 50% உயர்வு

 30 12 2021 ஒமிக்ரான் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, சென்னையில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 194 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று பாதிப்பு எண்ணிக்கை 294 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் 50 சதவீதம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதே போல், 10 நாள்களுக்கு முன்பு பதிவான பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், இது இரண்டு மடங்கு எண்ணிக்கை ஆகும். திடீர் தினசரி பாதிப்பு உயர்வு, சென்னையில் மூன்றாம் அலை ஆரம்பித்துவிட்டதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், புதிய மாறுபாடு ஸ்லீப்பர் செல் போல் ஆங்காங்கே இயங்கிவருகிறது. பலரும் லேசானது அல்லது அறிகுறியற்ற நிலையில் இருந்தால், மருத்துவரை பார்ப்பது கிடையாது. பரிசோதனை மட்டும் செய்வார்கள் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வார்கள். இது பரவலை அதிகரிக்கிறது.டெல்லி, மும்மையில் ஏற்கனவே தினசரி எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. தற்போது, சென்னையிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது” என்றார்.

புள்ளிவிவரங்கள் படி, டிசம்பர் 15 ஆம் தேதி 126 பேருக்கு தான் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. பின்னர் படிப்படியாக உயர்ந்து, டிசம்பர் 29இல் 294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமையன்று, ஒரே தெருவில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அந்த தெருவை கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில்,” சென்னையில் 200க்கும் மேல் கொரோனா பாதிப்பு உறுதியானது மூன்று மாதங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி தான். அப்போது, 205 பேர் பாதிக்கப்பட்டனர். ஜூன் மாதத்தில் தான் 290ஆக கொரோனா பாதிப்பு இருந்தது.

தற்போது, ஒரேடியாக மிகப்பெரிய அளவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டிசம்பர் 19இல், சென்னையில் கொரோனா பாதிப்பு 0.06 சதவீதமாக தான் இருந்தது. ஆனால், தற்போது 1.7 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது என்றார்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியாலஜியின் தொற்றுநோயியல் நிபுணர்கள் கூற்றுப்படி, சென்னையில் R மதிப்பு நவம்பர் மூன்றாவது வாரத்தில் 0. 93 ஆக இருந்த நிலையில், தற்போது 1. 2 ஆக அதிகரித்துள்ளது. ஆர் என்பது வளர்ச்சி விகிதம் அல்லது செயலில் உள்ள பாதிப்புகளின் வீழ்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது.

R மதிப்பு 1 ஐ விட அதிகமாக இருந்தால், தொற்று அதிகரித்து வருவதை இது காட்டுகிறது என தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் துணை இயக்குனர் டாக்டர் பிரப்தீப் கவுர் கூறுகிறார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், “தினசரி மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்டி – பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கையை 25 ஆயிரமாக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவதால், சுமார் 27 பயணிகளுடன் தொடர்பிலிருந்த 999 பேரை சுகாதார துறையினர் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர் ” என்றார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/covid-cases-in-chennai-up-by-50percent-in-a-day-create-fear-of-3rd-wave-390135/