22 12 2021 தமிழ்நாட்டில் 6 மாதங்களுக்கு முன்னர், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் மீது டெண்டர்கள் ஒதுக்கீடு செய்ததில் கோடிக்கணக்கில் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு, விதிமீறல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறைக் குழு, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைத் தேடும் நடவடிக்கைகளை பெங்களூருவில் இருந்து கூர்க்கிற்கு செவ்வாய்க்கிழமை மாற்றியது. இதனிடையே, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் மற்றொரு குழு, கடந்த வாரம் 69 இடங்களில் சோதனை செய்தது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் தொடர்புடைய 14 இடங்களில் சோதனை நடத்தியது.
லஞ்ச ஒழிப்புத் துறை போலிசாரால் முதலில், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் சகோதரர் சேகர் ஆகியோர் மீது கடந்த ஜூலை மாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அதிமுகவில் பலமாக இருந்த செந்தில் பாலாஜி, அக்கட்சியில் இருந்து விலகும் வரை கரூர் அதிமுக கோட்டையாக இருந்தது. தற்போது கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளார். செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த பிறகு, கரூரில் திமுக பலமடைந்திருக்கிறது. கரூரில் திமுகவை பலப்படுத்தும் அவரது முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக ரூ.28.78 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவருடைய சொத்துகள் 2016ம் ஆண்டை விட 654% உயர்ந்துள்ளது என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது. கே.சி. வீரமணி முதன்முதலில் 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சரானார். அவர் வணிக வரி உட்பட பல துறைகளுக்கு அமைச்சராக இருந்தார்.
கடந்த அக்டோபர் மாதம், அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மற்றும் சென்னை, கோவை, திருச்சி உட்பட 6 மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர். ரூ. 27 கோடி மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துகள் குறித்து அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
அடுத்து, முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் தற்போதைய தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகிய இரு முக்கிய அதிமுக தலைவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.
முந்தைய அதிமுக ஆட்சியில் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சராகக் கருதப்பட்ட எஸ்.பி. வேலுமணி, மேற்குத் தமிழகப் பகுதியைச் சேர்ந்த கொங்கு மண்டலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதே, எஸ்.பி. வேலுமணி ‘கோவை முதல்வரே’ என்று அடிக்கடி அழைக்கப்பட்டார்.
எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய 51 இடங்களில் கோயம்புத்தூரை சேர்ந்த சாமியார் மற்றும் அவர் அமைச்சராக இருந்தபோது ரூ.811 கோடிக்கு டெண்டர் விடப்பட்ட நிறுவனங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அவரது சகோதரர் அன்பரசன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் இளங்கோவன் வீட்டில் நடந்த சோதனையில், 21 கிலோ தங்கம், 280 கிலோ வெள்ளிப் பொருட்கள், 10 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்துகள் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கையை திமுகவின் பழிவாங்கும் அரசியல் என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. எஸ்.பி. வேலுமணி லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கையை எதிர்கொண்டதையடுத்து, அதிமுக தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது என்று புகார் அளிக்க ஆளுநரை சந்தித்தனர். எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கைகள் இவை.
மாநிலத்தில் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது புதிதல்ல. 1991-96 காலக்கட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து அடுத்து வந்தா திமுக அரசு அவரைக் கைது செய்தது. மீண்டும் முதல்வராக வந்தபோது, ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் அப்போதைய மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரை ஜூன், 2001ல் கைது செய்தார்.
திமுக அரசின் இந்த வழக்குகளை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூற முடியாது என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமைச்சர்கள் மட்டுமின்றி, அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 30 மூத்த அதிகாரிகளை கைது செய்துள்ளோம். இது ஊழலுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். வேலூரில் மூத்த பொதுப்பணித் துறை பொறியாளர் ஒருவரிடமிருந்து பணம், நகை பறிமுதல், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் செயலர் மீதான வழக்கு, காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை என அந்த மூத்த அதிகாரி திமுக அரசின் நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்தார். “தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தெளிவான வழிகாட்டுதல் உள்ளது. இயல்பாகவே முன்னாள் அமைச்சர்கள் மீது புகார்கள் வந்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். “தவறுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தெளிவான வழிகாட்டுதல் உள்ளது. இயல்பாகவே முன்னாள் அமைச்சர்கள் மீது புகார்கள் வந்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். அதிமுக தலைமை ஊழல் நிறைந்தது, அவர்கள் ஊழலுக்கு வழிவகுத்தனர்” என்று அமைச்சர் பி.கே. சேகர் பாபு கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-refuses-vendetta-as-aiadmk-important-former-ministers-faces-cases-386903/