ஞாயிறு, 19 டிசம்பர், 2021

வெளிநாட்டு பயணிகளுக்கு 7 நாள் வீட்டு தனிமை – மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் தமிழக அரசு

 வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வரும் பயணிகளை 7 நாள்கள் வீட்டு தனிமையில் வைக்கும் முடிவுக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது. ஏழு நாள்களுக்கு பிறகு, ஆர்டி-பிசிஆர் சோதனை செய்துகொண்டு, நெகட்டிவ் ரிசல்ட் வந்தபிறகே, பொதுவெளியில் பயணிக்க அனுமதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அண்மையில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒமிக்ரான் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது.

தற்போது, ஆபத்தான நாடுகள் என வரையறுக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

பட்டியலில் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. வெறும் 2 விழுக்காடு பயணிகளுக்கு மட்டுமே ரேண்டமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” ஆபத்தான நாடுகள் பட்டியிலில் இல்லாத நைஜீரியா,காங்கோ நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. எனவே, அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் வீட்டு தனிமை கட்டாயமாக்க வேண்டும். ஏழு நாட்கள் கழித்து அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தி, நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே, வீட்டைவிட்டு வெளியேற அனுமதியளிக்க வேண்டும். இத்தகைய மாற்றங்களை கொண்டு வருவது குறித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளோம்” என்றார்.

அமைச்சர் வெளியிட்ட தரவுகளின்படி, மொத்தம் 14,800 வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோனை மேற்கொண்டதில், 70 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், 28 பேருக்கு S வகை மரபு மாற்றம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 70 பேரின் மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதில் 10 பேரின் முடிவு வெளியாகியுள்ள நிலையில், அதில் ஏற்கனவே ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர் மற்றும் 8 பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-ask-central-to-make-home-isolation-mandatory-for-international-passengers/