கோவை மத்திய சிறையில் 33 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் வீரப்பனின் சகோதரர் மாதையன் உள்ளிட்ட 3 பேர்களை விடுதலை செய்யக் கோரி திமுக கூட்டணி கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 87 கட்சிகள் மற்றும் அமைப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
வீரப்பனின் சகோதரர் மாதையன் உள்ளிட்ட 3 பேர் கோவை மத்திய சிறையில் 33 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை மனிதாபிமான அடிப்படையில், நீண்ட காலம் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்கும் தமிழக அரசின் அறிவிப்பில் வீரப்பன் சகோதரர் மாதையன் உள்ளிட்ட 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட 87 கட்சிகள் மற்றும் அமைப்புகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கூட்டறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: “இது போன்ற நீண்ட சிறைவாசம் என்பது சிறைவாசிகளின் நலனுக்கும். அவர்களது குடும்பத்தாரின் நலனுக்கும் மட்டும் எதிரானது அல்ல. சிறைவாசிகளின் மறுவாழ்வு என்ற அரசின் கண்ணோட்டத்துற்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. இந்த சிறைவாசிகளின் முன் விடுதலைக் குறித்து அவர்கள் தண்டனை பெற்ற வழக்கினைக் காரணமாக வைத்து அறிவுரைக் குழுமம் மற்றும் இதர குழுமங்கள் பரிசீலிப்பதில்லை என்பது அதிர்ச்சிகரமாக உள்ளது.
சிறைவாசிகளின் விடுதலை குறித்துத் தமிழகத்தின் சிறைத்துறை அவ்வப்போது வெளியிடுகின்ற அரசாணைகள் சில குற்றங்களுக்குத் தண்டணை பெற்றவர்கள் மட்டும் முன் விடுதலைக்கு தகுதியானவர்கள் என்றும் மற்ற சில குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள் முன்விடுதலைப் பரிசீலனைக்கே தகுதியற்றவர்கள் என்றும் காட்டப்படுகிற பாகுபாடு, இது போன்ற நீண்ட சிறைவாசங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.
இந்தச் சிறைவாசிகளின் முன் விடுதலை தொடர்பான இத்தகைய பாகுபாடு என்பது, சட்டத்திற்கும் நியாயத்துற்கும் எதிரானது மட்டுமல்லாமல், சிறைவாசிகள் மறுவாழ்வு பெறுகின்ற கண்ணோட்டத்துற்கும், மனித உரிமைக்கும் எதிரானதாக உள்ளது.
மேலும், ஆயுள் சிறைவாசிகள் விடுதலை என்பது அவர் சிறையில் வாடும் காலத்தின் அடப்படையில் முடிவு செய்வதற்குப் பதிலாக, அவர் தண்டனை பெற்றுள்ள வழக்குப் பிரிவுகளின் அடிப்படையில் முடிவு செய்வதென்பது மனிதநேயத்தையும், சிறைவாசியின் விடுதலை குறித்தான நம்பிக்கையையும் தகர்ப்பதாக உள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433ஏ, ஆயுள் தண்டனை என்பதைக் குறைந்த அளவு 14 ஆண்டுகள் என்றே வரையறுத்துள்ளது. தவிரவும், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை, ஏற்கெனவே வழங்கியுள்ள சில தீர்ப்புகளில் சாதாரண ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை 10 ஆண்டுகள் கழித்துப் பரிசீலிக்கலாம் என்றும், முன்விடுதலையைப் பரிசீலனைக்கு உட்படுத்த முடியாத பிரிவுகளில் தண்டனை பெற்ற ஆயுள் சிறைவாடிகளின் முன் விடுதலைக் குறித்து 14 ஆண்டுகள் கழித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளன.
மேலும், வீரப்பனின் சகோதரர் மாதையன் சார்பாக முன் விடுதலை வேண்டி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 03.10.2017 அன்று உச்ச நீதிமன்றம் மாதையன் அவர்களுடைய முன் விடுதலைக் கோரிக்கையைப் பரிசீலித்து முடிவு செய்திடத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், அவருடைய விடுதலை என்பது இன்னும் சாத்தியமாகவில்லை.
சிறைத்துறை உயர் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் முன் விடுதலை குறித்து வெளியிடுகின்ற அரசாணைகளில் சில குறிப்பிட்ட வழக்குகளில் தண்டனை பெற்ற ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது வேதனையானது. இதனால், குறிப்பிட்ட சிறைவாசிகளின் மறுவாழ்வு மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வு என்பது தொடர்ந்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.
வீரப்பனின் சகோதரர் மாதையன் மற்றும் அவருடன் சேர்ந்து ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் சுமார் 75 வயதை நெருங்கிய முதியவர்களாக இருந்து வருகிற நிலையில் உடலாலும், மனதாலும் பல்வேறு துயரங்களுக்கு ஆட்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்களில் இவர்களுடைய மகன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் இறந்து, குடும்பங்கள் நிர்க்கதியான அவலநிலையில் இருந்து வருகின்றனர். அவர்களின் எஞ்சிய ஒரு சில ஆண்டுகளையாவது மீதமுள்ள உறவுகளோடு கழித்திடப் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
முழுக்க மனித நேயக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும், இரக்க குணத்தின் அடிப்படையிலும், மன்னிக்கும் அரசமைப்பு அதிகாரத்தைக் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் எனும் எதிர்பார்ப்போடு சிறையில் வாடி வருகின்றனர்.
சிறைவாசிகள் தங்களது தண்டனையைக் கழிக்கின்ற ஒவ்வொரு நாளும், என்றாவது ஒருநாள் நாம் விடுதலை ஆவோம் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான் காலத்தைக் கடத்தி வருகின்றனர். அந்த நம்பிக்கை நிறைவேறாத சூழ்நிலையில், நீண்ட ஆயுள் சிறைவாசியின் மனநிலை என்பது பெருத்த பாதிப்புக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகும் என்பதை தமிழக முதல்வர் கனிவுடன் பரிசீலித்து, இவர்களுக்கு விரைவில் விடுதலை வழங்கிட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-allies-joint-statement-to-cm-to-released-three-inmates-including-veerappans-brother-390503/